மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி? (கட்டுரை)

நடைபெறவுள்ள தேர்தல்களில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கி மிக மோசமான சரிவைச் சந்திக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தமிழரசுக் கட்சி தோல்வியை சந்திக்குமா? என்ற கேள்விக்கு அப்பால் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் பெற்ற  வாக்கு எண்ணிக்கையில் இம்முறை பாரிய சரிவைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதன் ஆதரவாளர்கள் மற்று பொது மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

உட்கட்சி பூசல்! 

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் அதிகாரம் இரண்டு பேரிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர்கள் ஏனையவர்களை கலந்தாலோசிப்பதோ அல்லது மதித்து நடப்பதோ இல்லை என்ற கருத்து வேறுபாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக இவர்கள் இருவரும் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தளத்தை அதிகரிப்பதற்கு அப்பால் தங்களுடைய ஆதரவு தளத்தை அதிகரிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக செயற்படுகின்றனர். இதில் மிக முக்கியமானவர் தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் மற்றையவர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இவர்கள் இருவரின் செயற்பாடுகள்  தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

உட்கட்சி ஜனநாயகம் இன்றி ஒருமித்து செயற்படாது நான் பெரிது நீ பெரிது என்ற  மமதையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதும் ஒருவரை பற்றி ஒருவர் சம்பந்தனிடம் போட்டுக் கொடுப்பதுமே உட்கட்சி ஜனநாயகமாக உள்ளது. கட்சியில் இருந்து  ஓரங்கட்டப்படும் யோகேஸ்வரன்! தமிழரசுக் கட்சியில் இருந்து மிகவும் சூட்சுமமாக திட்டமிட்டு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்  ஓரங்கட்டப்படுகின்றார்.

யோகேஸ்வரன் அவர்களை கட்சியின் தலைமையிடம் இருந்து பிரிப்பதற்கு துரைராஜசிங்கம் மற்றும் சிறினேசன் ஆகிய இருவருமே காரணம் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பல தீர்மானம் மிக்க விடயங்களில் யோகேஸ்வரன் வியாளேந்திரன் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டு சிறிநேசனின் தன்னிச்சையான முடிவுகள் பல சுமந்திரன் ஊடாக அறங்கேற்றப்பட்டுள்ளது.

இதற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கிய காரணமாக யோகேஸ்வரன் இந்து குருக்கள் என்பதும் அவர் இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்துள்ளார் என்பதற்காக கத்தோலிக்க ஆதிக்கம் கொண்ட சுமந்திரன் யோகேஸ்வரனை ஒதுக்கி செயற்படுகின்றார்.

மட்டக்களப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான யோகேஸ்வரன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த சுமந்திரன் அவர்கள் மதவாதி என வெளிப்படையாக ஊடகங்களில் விமர்சிக்கும் அளவுக்கு யோகேஸ்வரன் குறித்த தவறான அறிவூட்டல்களை சுமந்திரனிடம் விதைத்தது யார்? என்பது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். யோகேஸ்வரன் தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றார் என சம்பந்தன் அவர்களிடம் கூறி  யோகேஸ்வரனை மதவாதியாக காட்டி  சம்பந்தனிடம்  நெருங்கவிடாது தடுப்பது யார்? என்பதும் அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண கட்சி தொண்டனுக்கு நிலமை எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் சாதனை?

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் சாதனை என்பது துரைராஜசிங்கம் அவர்களின் சாதனையே.தமிழரசுக் கட்சியின் செயலாளரான துரைராஜசிங்கம் அவர்கள் அரசாங்கத்தினால் தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.

அதாவது தமிழ்  இளைஞர்கள் கட்டமைப்பு ரீதியாக வளர்ச்சி அடையக் கூடாது, தாங்கள் விடும் தவறுகளை தட்டிக் கேட்க கூடாது, தங்களுக்கு மேலான தலைமைத்துவம் வளர்ச்சி பெற கூடாது என்பதில் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டவர்  தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஐயா அவர்கள்.

இதனால் அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சேயோனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இளைஞர் அணியின் செயற்பாடுகளை முடக்கி வைத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் செயற்பாடுகள் பூச்சியமாகவே அமைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் துரைராஜசிங்கம் ஐயாவின் இராஜதந்திரமே.

கதிரைக்காக காத்திருக்கும் ஊமைகள்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழரசுக் கட்சியில்  சீட் வாங்குவது என்றால் அது யுத்த நேரத்தில் இராணுவத்திடம் பாஸ் வாங்குவதை விட மோசமானது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக வருபவர்களை தீர்மானிக்கும் சர்வாதிகாரம் அதன் செயலாளர் துரைராஜசிங்கம் ஐயாவிடமே உள்ளது.

கட்சியில் என்னதான் தீர்மானங்கள் எடுத்தாலும் துரைராஜசிங்கம் ஐயாவினை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவர்களின் அரசியல் கனவு நிறைவேறாது என்பதால் கட்சியில் கடந்த காலங்களில் வீர வசனம் பேசியவர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கின்றனர். அவர்கள் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்தோ தன்னிச்சையான முடிவுகள் குறித்தோ தவறான செயற்பாடுகள் குறித்தோ விமர்சித்தால் தமக்கு கட்சியில் சீட் கிடைக்காது என்று கருதி இன்று வரை ஊமையாகவே உள்ளனர் .

கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கங்கள்,

தமிழரசுக் கட்சிக்காக காலம் காலமாக  அடிமாடாய் உழைத்த தொண்டர்கள் , ஆதரவாளர்களின் கருத்துக்கள் எதிர்பார்ப்புக்கள் கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்காக புறக்கணிக்கப் படுவதாகவும் தங்களை எதிர்கட்சியில் இருந்து தாக்கியவர்களை தங்களது கட்சி  தற்போது வேட்பாளர்களாக இணைத்துள்ளதாகவும் ஆதங்கப்படுகின்றனர்.

இதைவிட கட்சியில் மிக நீண்ட காலமாக இருந்து செயற்பட்ட மூத்தவர்களின் கருத்துக்கு கட்சி  தலைமைகள் மதிப்பளிப்பதில்லை என்றும் குறிப்பிட்ட சிலரது கருத்துக்கள் மாத்திரமே திணிக்கப்படுவதாக ஆதங்கப்படுகின்றனர்.

முஸ்லீம்களிடம் அடகு வைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையில் பெற்றுக்கொண்ட  11 ஆசனங்களை முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கி கிழக்கு மாகாண ஆட்சியை முஸ்லீம்களிடம் கொடுத்து கிழக்கு தமிழர்களின் அபிவித்தி, வேலைவாய்ப்பு , பூர்வீக காணிகளை  முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்ததுதான் மிச்சமாக அமைந்துள்ளன.

இன்று அரசுடன் இணைந்த பங்காளிகளாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று அரச கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது என அடம்பிடித்து கிழக்கு தமிழர்களை முஸ்லீம்களிடம் அடகு வைத்துவிட்டனர்.

இது குறித்து பேசினால் நாங்கள் மட்டுமா செய்தோம் பிள்ளையான் செய்யவில்லையா என்று கொக்கரிக்கின்றார்கள்.

பிள்ளையானை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒப்பிட முடியாது பிள்ளையானின் கட்சி உருவாக்கம் அதன் அங்கத்தவர்கள் குறித்து பார்க்கும் போது மலைக்கும் மடுவுக்கும் ஒப்பானதாக இருக்கும்.

எனவே பிள்ளையானை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிட முடியாது.

ஆனால் ஒப்பீட்டளவில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண ஆட்சியை விட பிள்ளையானின் கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ் மக்களுக்கு நடந்த பணிகள் அதிகம் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அவர்களே ஒப்புக்கொண்டிருந்தார்.

அதைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண ஆட்சியில் தான் தமிழர்கள் தங்களது அதிகமான காணிகளை முஸ்லீம்களுக்கு பறிகொடுத்துள்ளனர்.
பல காணிகள் அபிவிருத்தி என்ற போர்வையில் முஸ்லீம் அமைச்சர்களின் தேவைக்காக தாரைவார்க்கப்பட்டுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

உள்ளூராட்சி தேர்தலும் மட்டக்களப்பு மாவட்டமும் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்கு காரணம் யார்? தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு காலம் காலமாக அரசாங்க மேற்கொண்டு வந்த முயற்சிகளுக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.

தமிழரசுக் கட்சிக்குள் பொதுச் செயலாளராக துரைராஜசிங்கம் அவர்களையும் தீர்மானம் எடுக்கும் சக்தியாக சுமந்திரனையும் கட்சியில் உள்வாங்கி போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைவுக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இவர்கள் இருவரின் இணைவுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் ஆதிக்கம் இருக்க கூடாது அவ்வாறு இருந்தால்  தமிழரசுக் கட்சியை தனியாக பிரிந்து செயற்பட வைக்க வேண்டும் என்ற முடிவை இன்று நிறைவேற்றி உள்ளனர்.

இவர்கள் கட்சிக்குள் வந்தது எவ்வாறு? இவர்களை செயற்பட வைப்பது யார்? இவர்களின் கடந்தகால பாத்திரம் என்ன? போன்ற பல்வேறு விடயங்களை அடுத்து வரும் பத்தியில் எழுத உள்ளேன்.