வடகொரியா – அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. இன்று அதிகாலையில் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
வடகொரியாவின் தொடர் ஏவுகணைச் சோதனையைக் கண்டித்து, அமெரிக்காவும், ஐ.நா.வும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் சுமார் 2 மாதங்கள் அமைதியாக இருந்த வடகொரியா, தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து ஜப்பானின் சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, உலகை அச்சுறுத்தும் நடவடிக்கையில் வடகொரியா ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.