மைத்திரி – மஹிந்த இணைவா, பிரிவா? இறுதிப் பேச்சு இன்று

இரண்டாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியின் இறுதிச் சுற்றுப் பேச்சு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலிருந்து அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் முன்னாள் அமைச்சர்களான மஹிந்த யாப்பா அபேவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, சீ.பீ ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மைத்திரி – மஹிந்த அணிகளை இணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த சமரசக் குழு கடந்த வார இறுதியில் கொழும்பில் கூடி பேச்சு நடத்தியிருந்தது.

இதன்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு மைத்திரி தரப்பினரும், மைத்திரி அணியினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு மஹிந்த தரப்பினரும் பச்சைக்கொடி காட்டாத நிலையில் இன்றைய தினம் மீண்டும் பேச்சு நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதற்கமைய இந்த சந்திப்பு கொழும்பில் இன்றையதினம் நடைபெறவுள்ள நிலையில் இது இறுதிச் சுற்றுப் பேச்சு என்று கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.