பூச்சூட வாருங்கள்

வாருங்கள் உறவுகளே
வருங்கால உறவுகளுக்காய்
விதையானவர்களை காண வாருங்கள்
வரும் காலம் எமதாக
களமாடியவர்களின் பெருமை பாட வாருங்கள்

வேதனைக்காற்றை அகற்றிட
உன்னத உயிரைத்திறந்தவர்களுக்காக
பூச்சூட வாருங்கள்

சாதனை பயின்று
சாமரம் வீசும்
சந்ததியினரைக்காண வாருங்கள்

சாவு அணைக்காத தவப்புதல்வர்களை
தழுவிட வாருங்கள்

செங்களமாடி செங்குருதி சிந்தி
எம்மண்ணைக்காத்த காவலர்களின்
நினைவு சுமந்து வாருங்கள்

சங்கத்தமிழ் பெருமை சேர்த்த
எங்கள் தமிழ்ச்செல்வங்களை
முத்தமிட வாருங்கள்

உடல் சிதைந்தாலும்
உண்மைத் தலைவன் சிந்தனை உதித்த
உத்தம புருசர்களை வாழ்த்த வாருங்கள்

மண்ணாசை பிடித்தவர்களை
விண்ணுலகம் அனுப்ப வேங்கையாய்
உருமாறிய புனிதர்களை தொழுதிட வாருங்கள்

பண்பாட்டை சிதைக்க படுகுழி
அமைத்தவர்களை
அக்குழியல் அடங்கச்செய்தவர்களை
அற்புதம் உரைக்க வாருங்கள்

சுயநலமற்ற தூய மனம் கொண்ட
நல்லவர்கள் வாழும் தலத்திற்கு வாருங்கள்

தீராத பற்றுக்கொண்டு
திருவுருவமாய் தீர்க்கம் தரும்
தெய்வங்களை போற்ற வாருங்கள்

இனமக்கள் இனிமையாக வாழ
விழி மூடியவர்களை பற்றி பா பாடவாருங்கள்

ஈழத்தாயின் கருவறைக்குள்
உயிர் வாழும் பிள்ளைகளை ஈன்றாரே வாருங்கள்

ஈகம் செய்தோர் இங்கனம்
துயில்கின்றார்கள்
ஈகைச்சுடர் ஏற்ற வாருங்கள்

செங்காந்தல் மலருடன்
செவ்வான நேரம்
செஞ்சுடர் வேந்தர்களுக்கு
சமர்ப்பிக்க வாருங்கள்

கல்லறைக்கடவுள்கள் கண் மலரும்
அதிசயம் நிகழும்
நெய்விளக்கேற்ற வாருங்கள்

விடிவுதனை எட்ட
வில்லினை ஏந்தி
வினாசகார படைகளை
விரட்டிய வேந்தர்கள்
விழி அணைத்து துயில் கொள்ளும்
வீர ர்களை வணங்கிட வாருங்கள்

மட்டுநகர் கமல்தாஸ்

Allgemein கவிதைகள்