புதுக்குடியிருப்பில் இன்று நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்றுகாலை பத்து மணியளவில் கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி தலைமைச்செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஜனநாயக போராளிகள் கட்சியினைச் சேர்ந்த டெல்சன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மாவீரர்களின் உறவுகளால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நினைவுப்பந்தலில் வைக்கப்பட்ட 200 மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளியின் பின்னர் மாவீரர்களின் திருவுருப்படங்கள் வைக்கப்பட்ட கொட்டகைகளில், உறவினர்கள் கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.

குறித்த நிகழ்வில், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கிருபாகரன், புதுக்குடியிப்பு வணிகர்சங்க தலைவர் செ.செல்வச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

மேலும், மாவீரர் பெற்றோர்களுக்கு மாவீரர்களின் திருவுருவப்படங்கள், தென்னங்கன்றுகள் மற்றும் நினைவுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியாக மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ஜனநாய போராளிகள் கட்சியானால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.