‚சேமமடு‘ எனப் பெயர் வரக் காரணம்…

‚சேமமடு‘ என அழைக்கப்படும் கிராமத்தின் முழுமையான பெயர் ‚சேமமடுக்குளம்‘ என்பதாகும். வவுனியாவில் உள்ள 95 வீதமான ஊர்களின் பெயர்கள் ‚குளம்‘ என்ற பின்னொட்டைக் கொண்டு முடிவடைவதனையும்,ஏனையவற்றுள் சில மடு,ஓடை,மோட்டை, போன்ற பின்னொட்டுக்களைக் கொண்டு முடிவடைவதனையும் காணலாம். இங்கு ‚குளம்‘ என்ற சொல்லும் ‚மடு‘ என்ற சொல்லும் நீர்நிலையையே குறிக்கிறது. ‚சேமமடு‘ என்ற பெயருடன் ‚குளம்‘ என்ற பின்னொட்டு 1895ஆம் ஆண்டுவரை இணைந்திருக்கவில்லை என்பதை ஜே.பி.லூயிஸின் நூல் தெளிவுபடுத்துகிறது.
சேமமடு குறித்துப் பலரிடம் வினாவிய போது 1958ஆம் ஆண்டுகளில் உருவான குடியேற்றமே சேமமடு என்ற பதில் கிடைத்தது. ஆனால்,
“J.P.Lewis“ என்ற ஆங்கிலேய அரசாங்க அதிபர் 1895 இல் வெளியிட்ட „Manual Of The Vanni Districts“ என்ற நூலில் கனகராயன் ஆறு குறித்துப் பேசும் போது, ‚சேமமடு‘ என்ற ஊரின் பெயரைக் குறிப்பிடுவதுடன், இக் கிராமத்தில் புராதன ஆச்சிரமம் இருந்ததெனவும் குறிப்பிடுகின்றார். அக் கட்டடச் சிதைவுகள் கி.மு 2ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு 3ஆம் நூற்றாண்டிற்குரியவை என்கிறார். (‚சேமமடு‘ என்றே அவரது நூலில் உள்ளது. ‚சேமமடுக்குளம்‘ எனக் குறிப்பிடப்படவில்லை)
ஆகவே,
‚சேமமடு‘ 1958களில் உருவான குடியேற்றம் எனில், 1895 களில் வெளியான நூலில் அதன் பெயர் எவ்வாறு வந்திருக்க முடியும்? குடியேற்றமொன்று 1958களில் உருவாகியிருப்பினும் அதற்கு முன்னரே ‚சேமமடு‘ என்னும் கிராமம் இருந்திருக்கிறது.
காலந்தோறும் வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வுகளும், புதிய குடியேற்றங்களும் வன்னியின் வரலாற்றைக் காலந்தோறும் புதிதாகக் கட்டமைத்தன என்பது மேற்குறித்த செய்திகளால் தெளிவாகிறது. வன்னி வரலாறு நெடுங்காலமாக வாய்மொழியாகவே கடத்தப்பட்டுவந்தமையும், இற்றைவரை வன்னி வரலாறு தெளிவாக வரையறை செய்யப்படாமையும், பல்கலைக்கழக மட்டங்களில் இற்றைவரை வன்னி வரலாறு தொடர்பான ஆய்வுகள் பிரக்ஞை பூர்வமாக மேற்கொள்ளப்படாமையும் திரிபுபட்ட வரலாறுகள் தோன்றக் காரணமாயின எனலாம்.
வன்னியின் ஊர்கள் பலவற்றின் வரலாறுகளை ஆராய்கின்றபோது அவை இராமாயணக் கதையுடன் தொடர்புபடுத்தப்படுவதனை அவதானிக்க முடிகிறது. ‚சேமமடு‘ எனும் கிராமத்தினையும் இராமாயணக் கதையுடன் தொடர்புபடுத்துவதனை அவதானிக்க முடிகிறது. அதாவது, இராமாயணப் போர் நிறைவடைந்த பின்னர், இராமனது சேனைகள் இளைப்பாறிய இடமே சேமமடு என்பர்.(சேமம் + மடு) ‚சேமமாயிருந்த மடு‘ எனும் பொருளில் ‚சேமமடு‘ என அழைக்கப்பட்டதென்பர். காலப்போக்கில் மடுவைச் சுற்றியிருந்த நிலப்பகுதியும் ‚சேமமடு‘ என அழைக்கப்பட்டதென்பர்.
‚பன்றிக்கு எய்த குளம்‘ , ‚அலை கல்லுப் போட்ட குளம்‘ , ‚கிடாப் பிடிச்ச குளம்‘ போன்ற பல ஊர்களின் பெயர்களினை நோக்குகையில், குறிப்பிட்ட சில சம்பவங்கள் பின்நாட்களில் ஊர்களின் பெயர்களாக மாறி இருப்பது தெளிவாகிறது. இதனைப் போலவே ‚சேமமடு‘ எனும் ஊர் இராமாயண காலத்தில்

தோற்றம் பெற்றிருக்கக் கூடும். (ஆய்விற்குரியது)

.

(#இது வன்னிவரலாற்றினை ஆவணப்படுத்த வேண்டுமென்ற உந்துதலால் வன்னி பற்றிய தகவல்களைச் சேகரிக்க முற்பட்டபோது பெறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் வரையப்பட்ட குறிப்பாகும்.)

 

Allgemein தாயகச்செய்திகள்