மக்களின் அதிகாரங்களை உறுதியான நிலை நிறுத்தினால் பிரிக்கதேவையில்ல‌ை‌

யாழ்ப்பாணம், தமிழ் மக்களின் அதிகாரங்களை உறுதியான முறையில் நிலை நிறுத்தினால், நாட்டைவிட்டுப் பிரிந்துசெல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று எப்போதும் கேட்டதும் இல்லை. சமஸ்டி முறையிலான அரசியல் யாப்பே எமது உரித்துக்களை உரிய முறையில் தரவல்லது என்பதனை திடகாத்திரமாக கூறுவேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ( vigneswaran ) தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரின் செயலகத்தில் இன்று (08.11) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இடைக்கால அறிக்கை தொடர்பாக தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.

எமது பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்பதே எமது கரிசனை. எமது பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து அந்த பிரச்சினைக்குரிய காரணங்களையும் பரிசீலித்து தீர்வினைக் காண வேண்டும். ஆனால், சில விடயங்களை அரசு எமக்குத் தந்திருக்கின்றது. அந்த உரித்துக்கள் எமக்குக் காணாது. இந்திய இலங்கை ஒப்பந்த்தின் ஊடாக பெற்றுக்கொண்ட உரித்துக்களை பறித்து விட்டு அவர்கள் மீள தருக்கின்றார்கள் எனவும் அவர்கள் தருவதை தரட்டும் என இருக்க முடியாது. எமக்கான உரித்துக்களைத் தரவேண்டியது அரசாங்கத்தின் கடைப்பாடு. எமது பிரச்சினைகள் பற்றியும், எமது பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றியும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

சமஸ்டி அடிப்படையிலான அரசியல் யாப்பே எமக்குப் போதுமான உரித்துக்களைத் தரக்கூடியவை என்பதே எமது அவதானம்.

ஓற்றையாட்சியின் கீழ் எது நடந்தாலும், எவற்றினைத் தந்தாலும், பெரும்பான்மை மக்களின் அதிகாரம் மேலோங்கி நிற்கும், அந்த அதிகாரத்தின் மூலம் தருவதையும் திருப்பி எடுக்கக்கூடும். சமஸ்டி முறையிலான அதிகாரத்தினை முன்னெடுத்தால், ஒவ்வொரு அலகிற்கும் ஒவ்வொரு உரித்துக்களைக் கொடுத்து எவரும் மற்றவர்களை அதிகாரம் பண்ணாத நிலையை ஏற்படுத்தினால், தமிழ் மக்களும் இணைந்து இந்த நாட்டை ஆள முடியுமென்ற நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றோம். நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று எப்போதும் கேட்கவில்லை.

சமஸ்டி அடிப்படையில் உள்ள நாடுகள் எவையும் பிரியவில்லை. கனடா மற்றும் ஸ்கொட்லன்ட் நாடுகளும் அவ்வாறே உள்ளன.

எமது அதிகாரங்களை நிலைநிறுத்தினால், பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் எதுவுமில்லை. இவற்றினை அடிப்படையாக வைத்தே இடைக்கால அறிக்கையினைப் பார்க்கின்றோம். ஆவ்வாறு பார்க்கும் போது இடைக்கால அறிக்கையில் பல குறைபாடுகள் உள்ளன. ஒவ்வொருவரின் பார்வைகள் வித்தியாசமாக இருக்கும். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், பிரச்சினை என்ன அவற்றின் தீர்வு என்ன என்பது பற்றிய கருத்துக்களை திடமாக கூற வேண்டுமென்ற நோக்கத்தில் கூறுகின்றேன் என்றார் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ( vigneswaran ).