புன்னகை பூ

உரத்துப் பேச
இனி உள்ளூருக்குள்
எதுவுமில்லை
ஊனமுற்ற எங்களுக்கு
ஒருவேளை கஞ்சிக்காய்
திருவோடு ஏந்தினாலும்
திருப்பங்கள் ஏதுமிலலை
உயிர் மட்டுமிங்கே
தெருத்தெருவாய் அலைகிறது

வந்து வந்து போகிறது
தேர்தல்களும்
வருத்தப்படாத
தலைவர்களும்
வழி காட்ட எமக்கென்று
வம்சத்தில் எவருளரோ…

ஊன்றி ஊன்றி நடக்கின்றோம்
உண்மைகளை உரைக்கின்றோம்
உறுதியெடுத்த சான்றிதழாய்
செத்து செத்து மடிகின்றோம்

நீர் வளர்த்த பயிரெல்லாம்
மண்ணோடு போனபின்னும்
இன்னும் குற்றுயிரோடு
நாமிங்கு
கூன்விழுந்து அலைகின்றோம்
உம் நினைவுகளை சுமந்தபடி
வான் வெளியில் தொலைகின்றோம்

புன்னகையில் பூத்திருந்து
மண்ணுக்காய் வாழ்ந்த
தமிழுக்கு ஓர் வணக்கம்
கரம் கூப்பி வணங்குகினறோம்
சிரம் தாழ்ந்த வீர வணக்கம்

Allgemein கவிதைகள்