புதிய அரசியலமைப்புக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவாம் சுமந்திரன்!

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் உடன்பட்டுள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியல் யாப்பு பேரவை நடவடிக்கை சபையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இன்று காலை ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

பௌத்த மதத்திற்கு முக்கிய இடத்தை வழங்குவது தொடர்பில் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் பெரும்பாலான ஆலோசனைகள், தேசிய பிரச்சினைகள் தொடர்பில் உடன்பாட்டுக்கு வருவதில் சிரமங்கள் இருந்த போதிலும், இன்றைய தினம் வரலாற்றுக்கு முக்கியத்துவமானது.

உடன்பாட்டிற்கு வரக்கூடிய நோக்கில் அடிப்படை விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார்.

புதிய அரசியல் யாப்பினை தயாரிக்கும் பொழுது பிரச்சனை ஏற்பட்டாலும் அவை அனைத்தும் தேர்தலின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியாகும்.

மகிந்த ராஜபக்ஷவும் கூட புதிய அரசியல் யாப்பு வகுக்கப்படும் என்று தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார். நாடாளுமன்றம் அரசியல் யாப்பு பேரவையாக அமைக்கப்பட்டுள்ளது. மகிந்தவும் அன்று இதையே கூறினார்.

இதனால் 97 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் புதிய அரசியல் யாப்பை வகுப்பதற்கே வாக்களித்தனர். இது மக்கள் ஆணையாகும்.

அரசியல் யாப்பு பேரவை சட்டவிரோதமானது என்று எவ்வாறு கூறமுடியும். இந்த கூற்றில் எந்தவித அர்த்தமும் இல்லை. அனைத்து மக்களுக்கும் சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

அனைத்து பிரஜைகளுக்கும் சமமாக மதிப்பளிப்பதே அரசியல் யாப்பு என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Allgemein