மாமியாரை கொலை செய்து, மனைவியை வெட்டிய நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு!

கிளிநொச்சியில் மாமியாரை வெட்டி கொலை செய்ததுடன், மனைவியை வெட்டி காயப்படுத்திய குற்றத்திற்காக குற்றவாளிக்கு 8ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி யோகராசா சிவகலா (வயது 42) எனும் பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

அவரது மகள் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உயிர் தப்பினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காயங்களுக்கு இலக்கான பெண்ணின் கணவரான கணேசஐயா காந்தரூபன் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பெண்ணை கொலை செய்தமை மற்றுமொரு பெண்ணை கொலை செய்யும் நோக்குடன் வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வு பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, “எதிரிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால் எதிரியை நீதிமன்றம் குற்றவாளியாக காண்கிறது.

பெண்ணை வெட்டிப்படுகொலை செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், மற்றுமொரு பெண்ணை வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஒரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகின்றது.

இரண்டு தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும். அத்துடன் இரண்டு குற்றங்களுக்கும், தலா 3000 ரூபாய் வீதம் 6000 ரூபாய் தண்டப்பணமாக செலுத்த வேண்டும். அதனை செலுத்த தவறின் இரண்டு மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.” என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

Allgemein