”சம்பந்தன் புதிய நாடகம் அரங்கேற்றம்”

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் அரசியலமைப்பு உரிமை முற்றாக அரசினால் மறுக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரும் அநீதி. இதனை ஏற்க முடியாது. இக் கைதிகள் மட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிட்டால் அது நல்லிணக்கத்திற்கு பாரிய தடையாக அமையும் எனவும் எச்சரித்த சம்பந்தன், இவ்விடயத்தை தமிழ் மக்கள் வேறு விதமாகவே நோக்குவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று கைதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே மேற்படி கூறிய இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என அரசு கூறமுடியாது. இக் கைதிகள் விடயத்தில் அரசியல் உள்ளது. சாட்சிகளுக்கு பாதுகாப்பு தேவையெனில் வழக்கை மாற்றத் தேவையில்லை. சாட்சிகளுக்கு பாதுகாப்பை வழங்கியிருக்க முடியும். வவுனியாவில் உள்ள வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியதன் மூலம் அக் கைதிகளின் அரசியலமைப்பு உரிமை முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தமிழ் மூலமானது. அநுராதபுர நீதிமன்ற நடவடிக்கைகள் சிங்கள மொழி மூலமானது. இதன் மூலம் கைதிகள் தமது வழக்கு தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அரசும் ஜெனீவாவில் ஏற்றுக் கொண்டுள்ளது.

அவ்வாறான நிலையில் அதே சட்டத்தின் கீழ் இவர்களை தடுத்து வைத்திருப்பதில் நியாயம் என்ன? ஆகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்விவகாரம் தொடர்பாக நாம் அரசுடன் பேசுவதில்லை என குற்றம்சாட்டப்படுவதால் மக்கள் மத்தியில் நாம் செல்வாக்கை இழந்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

அரசுக்கு 100 சதவீதம் ஆதரவை கொடுத்துவரும் சிங்கக்கொடி சம்பந்தன் தரப்பு மீது மக்கள் கடும் விரக்த்தியில் உள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலை குறிவைத்து கூட்டமைப்பினர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Allgemein தாயகச்செய்திகள்