குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்! – சிறிதரன் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இலத்திரனியல் திருத்தச் சட்ட வரைபு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தத்தின் போது மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டதும், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதும் எந்த தொழிநுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய சிறிதரன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் திட்டமிட்ட வகையில் வேறு திசைக்கு மாற்றப்படுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென்றும், தற்போது தடுப்பில் உள்ளவர்கள் பயங்கரவாதிகள் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோர் கூறியதற்கு கடும் கண்டத்தையும் வெளியிட்டுள்ளார்.

தமிழர்கள் விடயத்தில் இவ்வாறான நிலை தொடருமாயின், கத்தலோனியா, குர்திஸ்தான் உள்ளிட்ட நாடுகளைப் போன்று பொதுவாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டி ஏற்படுமென சிறிதரன் எச்சரித்துள்ளார்.