தாய்லாந்து வங்கி கொள்ளையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்பா?

தாய்லாந்து வங்கிக் கொள்ளையுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் மன்றம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதனால் பிரித்தானிய பிரஜையான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஷலீல முனசிங்கவை ஸ்ரீலங்காவிற்கு அழைத்து வந்து பதவி வழங்கியவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தாய்லாந்தின் ஷா ஈஸ்டன் வங்கியின் இணையத்தளத்திற்குள் ஊடுறுவி 60 மில்லியனுக்கும் அதிகமான டொலர் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அமைய ஸ்ரீலங்காவின் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிவந்த ஷலீல முனசிங்க என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் கடந்த 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முனசிங்கவிற்கு சொந்தமான வங்கிக் கணக்கிற்கு தாய்லாந்து வங்கியில் கொள்ளையிடப்பட்ட ஒருதொகை பணம் மாற்றப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டார்.

அதேவேளை இந்த வங்கிக் கொள்ளை தொடர்பில் ஜே.சீ. நம்முனி என்ற நபரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நம்முனி என்பரின் வங்கிக் கணக்கிற்கு ஸ்ரீலங்கா ரூபாய் பெறுமதியில் 300 இலட்சம் ரூபாய் பணம் மாற்றப்பட்டுள்ளதுடன் இந்தப் பணத்தில் 150 இலட்சம் ரூபாயை இந்திய நிறுவனமொன்றுக்கு நம்முனி மாற்றியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை தாய்லாந்து வங்கிக்கொள்ளை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்க மற்றும் ஜே.சீ.நம்மனி ஆகிய இருவரும் பிரித்தானிய பிரஜைகள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் குரல் அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தாய்லாந்து வங்கிக் கொள்ளை தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்துள்ளது.

வசந்த சமரசிங்க – ஒருங்கிணைப்பாளர், ஸ்ரீலங்காவின் தற்போது புதிய ஆட்டமொன்றை ஆரம்பித்திருக்கின்றது. வெளிநாட்டுப் பிரஜைகளை அழைத்துவந்து அரச நிறுவனங்களின் தலைவர்களாகவும், பணிப்பாளர் சபைகளின் உறுப்பினர்களாகவும் நியமித்து வருகின்றது.

சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மகேந்திரனை அழைத்துவந்து ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்திருந்தது.

அவர் பட்டப் பகலில் மத்திய வங்கியை கொள்ளையடித்தார். தற்போது முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரித்தானியாவிலிருந்து அழைத்து வந்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க தாய்லாந்து வங்கியொன்றை கொள்ளையடித்துள்ளார்.

இந்த நிலையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பணம் எங்கு சென்றுள்ளது என்பதை விசாரணையொன்றை நடத்தித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு கிலோ எரிவாயுவில் இருந்து பத்து சதம் டொலரை மேலதிகமாக வைத்துக்கொண்டால் கோடிக்கணக்கான டொலரை இலகுவாக கொள்ளையடிக்க முடியும். அதனால ஷலீல முனசிங்கவை ஸ்ரீலங்காவிற்கு அழைத்துவந்தவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

குறிப்பாக மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணைகளின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வாரம் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் நேரில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதான்போது அவர் பிணை முறி மோசடியில் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து அமைச்சுப் பதவியும் பறிக்கப்பட்டது.

அதேபோல் ஏனையவர்கள் தொடர்பிலும் பல ரகசியங்கள் அம்பலமாகி வருகின்றன. அதனால் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் ஏனைய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணைகளையும் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும்.

இதன்போது குறிப்பாக ரவி கருணாநாயக்கவின் பாரியாருக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.