வடகொரியாவால் 2 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து :

வடகொரியா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் சியோல் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்படலாம் எனவும், சுமார் 7 மில்லியன் மக்கள் படுகாயமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் வடகொரிய அரசாங்கத்திடம் இருப்பதாக கூறப்படும் அணு ஆயுதங்களின் தாக்கத்தை கணணிகள் வாயிலாக ஆய்வுக்கு உட்படுத்தியதில், தென் கொரியா மற்றும் ஜப்பானின் மக்கள் தொகை மிகுந்த இரு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர்ச் சூழல், எந்த நெருக்கடிக்கும் பணியாத கிம் ஜோங் வுன், கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளின் சோதனை வெற்றி என உலக அரங்கையே தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது வடகொரியா.

இருப்பினும் வடகொரியா அரசாங்கத்திடம் எந்த அளவுக்கு அணு ஆயுதம் உள்ளன என்பது கணிக்க முடியாத அளவில் ரகசியம் காக்கப்படுவதால், கிம் ஜோங் வுன் எதிரி நாடுகளுக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை கணிக்க முடியவில்லை என நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனிடையே அணு ஆயுத பயன்பாட்டால் எழும் தாக்கங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளன.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவால் தொடுக்கப்படும் போரின் தாக்கம் மக்கள் தொகை மிகுந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் தலைநகரங்களை கடுமையாக பாதிக்கும்.

நினைத்துக் கூட பார்க்க முடியாத அப்படி ஒரு சூழல் உருவாகும் எனில் அதன் விளைவு என்பது சியோல் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள 2.1 மில்லியன் மக்களின் சமாதிக்கு ஒப்பாகும், மட்டுமின்றி 7.7 மில்லியன் மக்கள் படுகாயமடைவார்கள் எனவும் அவர் கணித்துள்ளார்.

வடகொரியாவால் அணு ஆயுதம் தாங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் முக்கியமான 20 முதல் 25 பகுதிகளில் இருந்து தாக்குதல் தொடுக்க அந்த நாடு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Allgemein உலகச்செய்திகள்