மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா?

சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய அவசியக் கருத்து நிலை

தமிழ் அரசியலில் மாற்றுத் தலைமையைப் பற்றி மீண்டும் மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இது மெய்யாகவே மாற்றுத் தலைமைகளைக் கோருகின்ற காலமாகும்.

கடந்த 70 ஆண்டுகாலத் தமிழ் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியவாத முலாம் புசப்பட்ட சக்திகளின் தோல்வியும் இயலாமையும் பகிரங்கமாக வெளிப்பட்டு, அம்பலப்பட்டு  நிற்கின்ற சூழலில், அதற்கு மாற்றான – மெய்யான அரசியல் தலைமைகளை இனங்காண்பதற்குத் தமிழ்ச்சமூகம் முயன்று கொண்டிருக்கும் காலகட்டமாகும்.

ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற தமிழ்த்தேசியவாதச் சக்திகள், “மாற்றுத் தலைமை வேணும்” என்ற பேரில், ஏற்கனவே இருக்கின்ற சக்திகளுக்குக் கொஞ்சம் வேறமாதிரி ஒரு கலரைப் பூசி அவற்றையே மீண்டும் களத்தில் நிற்க வைப்பதற்கான சூழ்ச்சிகர முயற்சிகளில் இரகசியமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

அதாவது அதே முருங்கைக்கும் அதே வேதாளத்துக்கும் கலரை மாற்றி விட முயற்சிக்கின்றன.

தற்போது கிடைக்கின்ற தகவல்களின்படி எப்படியாவது விக்கினேஸ்வரனை மாற்று அணிக்கான தலைவராக்கியே தீருவதென்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.

“மாற்றுத் தலைமைக்குத் தான் தயாரில்லை. சம்மந்தன் இருக்கும் வரையில் அதற்கு அவசியமில்லை” என விக்கினேஸ்வரன் பகிரங்கமாகவே பல தடவை அறிவித்திருந்தாலும் இந்த “விடாக்கண்டர்கள்” தங்கள் முயற்சியில் சற்றேனும் தளராமல் முயன்று கொண்டேயிருக்கிறார்கள்.

இதற்காக தமிழரசுக் கட்சிக்கு எதிரான தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கான பல சுற்றுப்பேச்சுகளில் சில பிரமுகர்கள் இங்குமங்குமாக ஓடியோடி ஓயாது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கமைவாக இப்போது கட்சிகளுக்கிடையில் இணக்கத்தைக் காண்பதும் ஒட்டுப்போட்டு அவற்றைச் சீர்செய்வதுமே முதற்கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது மறுபடியும் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு உத்தியில் தமிழ்த் தேசியவாத அரசியலை முன்னெடுப்போர் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

blogger-image-341689166  மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா? - கருணாகரன்  (உயர்தர கட்டுரை) blogger image 341689166இது ஏறக்குறைய 1970 களில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியைக் கைவிடும் நிலைக்கு வந்து, “தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேணும்” என  அறிவித்தபோது, அமிர்தலிங்கம் தரப்பினர் அதற்குப் புதுசாகப் பெயின்ற் அடிச்சுத் “தமிழர் விடுதலைக் கூட்டணி” என்று ஆக்கியதற்கு ஒப்பானது.

அப்படி உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி, 1981 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் “மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலோடு தன்னுடைய இயலாமையையும் சுயரூபத்தையும் வெளிப்படுத்தி அம்பலமாகியது.

அதற்கப்பால் நகர்வதற்கு அதனிடம் எந்தத் திட்டங்களும் புதிய உபாயங்களும் இருக்கவில்லை. அரசியல் உள்ளடக்கமும் செயற்பாட்டுத் திறனும் இல்லாத எந்தக் கட்சியும் நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாது.

r-sampanthan-tna  மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா? - கருணாகரன்  (உயர்தர கட்டுரை) r sampanthan tnaஆனாலும் வரலாற்றிற் தாங்கள் தோல்வியைச் சந்திக்கவேயில்லை. தாங்கள் தவறுகளை இழைக்கவேயில்லை என்கிற மாதிரியே தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன.

இந்த இரண்டும் இன்று வெவ்வேறு கட்சிகளாகவும் வேறு வேறு தலைமைகளைக் கொண்டுள்ளதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மையில் அப்படியல்ல.

aananthasngari4  மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா? - கருணாகரன்  (உயர்தர கட்டுரை) aananthasngari4இரண்டுமே அரசியல் உள்ளடக்கத்தில் ஒன்றானவையே. சாதி, பால், இனம், வர்க்கம் கடந்து சிந்திப்பவையல்ல இந்த இரண்டு தரப்பும்.

தனிப்பட்ட ரீதியில் சம்மந்தனும் ஆனந்தசங்கரியும் தங்களுக்குள் மோதி, முரண்பட்டு,  இரண்டு நிலைப்பட்ட கட்சியினராகக் காட்டிக்கொண்டாலும்  இரண்டு தரப்பும் ஒன்றே. ஒன்று மோதகம். மற்றது கொழுக்கட்டை என்ற தமிழ்ப்பழமொழியை நிரூபிக்கின்றவை.

இதற்கு நிகராகவே தமிழ்த்தரப்பிலுள்ள ஏனைய கட்சிகளும் உள்ளன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைக் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் பேரவையும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட பெரிய அளவில் வேறு பட்டவை அல்ல.

ஆனால், இதை யாரும் தற்போது மறுத்துரைக்கக்கூடும். “தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையும் “இரு தேசம் ஒரு நாடு“ என்ற கோட்பாட்டைக் கொண்டவை.

அந்தக் கோட்பாட்டில் அல்லது அந்த நிலைப்பாட்டில் அவை உறுதியாக நிற்கின்றன. ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதைச் சொல்லவில்லையே.

அது ஈ.பி.டி.பி இதுவரையும் முன்மொழிந்து கொண்டிருந்த “இணக்க அரசியலுக்கு”ச் சென்று விட்டது. தஞ்சமடையும் அரசியலில் சரணாகதியடைந்துள்ளதே” என.

வெளித்தோற்றத்துக்கு இவ்வாறு வேறுபட்ட நிலைகள் தென்படலாம். ஆனால், தாம் முன்மொழிகின்ற அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தில், இவையெல்லாம் ஒன்றே.

சாதி, பிரதேசம், பால், மத வேறுபாடுகள் எனத் தமிழ்ச் சமூகத்தினுள்ளே காணப்படும் அக வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளிலும் இவை வேறுபட்டவை அல்ல.

அதற்கான செயற்றிட்டமே இல்லாதவை. மட்டுமல்ல, தம்மை அர்ப்பணிக்கவும் களத்தில் நின்று செயற்படவும் தயாரில்லாத மேட்டிமைத்தனமான – பிரமுகர் அரசியலில் இரண்டுக்குமிடையில் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

இரண்டுமே “வெறுவாய் சப்பி”கள்தான். இன அடிப்படையைப் பேசுவதில் அழுத்த வேறுபாடுகள் கொண்டவை. அவ்வளவுதான். கொஞ்சம் அழகாகப் பாரதியாரின் வார்த்தைகளில் சொன்னால், “வாய்ச்சொல் வீரர்கள்”.

ஆகவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பேரவையும் அதிகாரத்துக்கு வந்தால், அவையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் போல “வெறும் ஊஞ்சலையே” ஆட்டிக் கொண்டிருக்கும்.

ஆனால், இதையே புதிய தலைமை, மாற்றுத் தலைமை எனக் காட்ட முற்படுகின்றனர் இந்தப் போலிகள். ஆகவேதான் பலரும் குறிப்பிடுவதைப்போல, தமிழ்ச் சிந்தனை முறையானது, “சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்” தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகவும் காட்ட முற்படுகிறது.

இதனால்தான் மெய்யாகவே தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையையும் அரசியல் சுபீட்சத்தையும் விரும்புவோர் ஒரு நேர்மையான – வினைத்திறனுள்ள மாற்று அரசியற் சக்திகளை எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக அவர்கள் தங்கள் உணர்கொம்புகளை வெளிப்பரப்பில் நீட்டித் தேடத் தொடங்கியுள்ளனர். தமிழ்ச் சமூகத்திலுள்ள அக ஒடுக்குமுறை வடிவங்கள் வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம், மதம் சார்ந்து காணப்படுகின்றன.

அத்துடன் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையையும் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதில் தமிழ்ச்சமூகத்தினுள்ளே உள்ள அடிமட்ட மக்கள் இரட்டை ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே இந்த இரட்டை ஒடுக்குமுறைக்கு எதிரான, இரட்டை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலையைப் பெற்றுத் தரக்கூடிய தலைமைகளே இன்று அவசியமானவை. ஆனால், இதை மழுப்பி, தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுக்குகின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர் இந்தப்போலிகள். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையக்கூடிய, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், தலைமையை இவர்கள் கோரவில்லை.

ஆகவேதான் இவை புதிய தோற்றத்தில் பழைய சரக்கையே விற்பதற்கு முயற்சிக்கின்றன. இதற்குக் காரணம், தங்களுடைய இருப்பைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதேயாகும்.

தங்களுடைய ஆதிக்கத்தை இழப்பதற்கு இவர்கள் விரும்பவில்லை. இது உண்மையில் மாற்றுத் தலைமையைக் கோருவதல்ல. அதை இன்னொரு வகையில் பேணும் முயற்சியே.

இந்த மாறாக்குணத்தைப் பேணும் முயற்சி, தனியே அரசியல்வாதிகளால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்த்தேசியவாத அரசியலை ஆதரித்துப்பேசும் பிற சக்திகளாலும் முயற்சிக்கப்படுகிறது.

இது மிக ஆபத்தானது. மீண்டும் செல்லுபடியற்ற அரசியலை, மக்கள் விரோத அரசியலைச் செய்வதென்பதும் செயற்படுத்துவதற்கு அனுமதிப்பது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

ஆகவேதான் நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் மிக அவதானமாக நடந்து கொள்ளவும் இந்த அபாயகரமான நிலையைத் தீவிரநிலையில் எதிர்க்கவும் வேண்டியுள்ளது.

மக்களின் அரசியல் பொருளாதார சமூக விடுதலையை விரும்பும் சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தில் மிகப் பொறுப்போடும் கண்ணியத்தோடும் வேகத்தோடும் செயற்பட வேண்டும்.

எழுபது ஆண்டுகாலப் போராட்டமும் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த அரசியல் வழிமுறைகளும் தமிழ் மக்களுக்குத் தக்கதொரு பாடமாகும். சரி எது? தவறு எது? என்பதை வெளியே இருந்து யாரும் தமழ் மக்களுக்குப் புதிதாகக் கற்றுத்தர வேண்டியதில்லை.

அவர்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவங்களே சிறந்ததொரு பாடமாகும். எனவேதான் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படாமல் விழிப்புடன் மாற்று அரசியற் சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்று சொல்கிறேன்.

இந்த மாற்று அரசியல் சக்திகள் நிச்சமாகப் பிரமுகர் அரசியலுக்குள்ளால் வரப்போவதில்லை. அதற்குள் தேடுவதால் பயனுமில்லை.

ஆனால் தமிழ் மக்களுடைய உளவியலும் அரசியல் தெரிவுப் பாரம்பரியச் சிந்தனையும் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. படித்தவர்கள், பட்டம்பெற்றவர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் அல்லது உயர்பதவி வகித்தவர்கள், ஏதோ ஒரு வகையில் புகழடைந்தவர்கள், பெரிய அந்தஸ்துகளைக் கொண்டவர்களே நமக்குத் தலைவர்களாக வேண்டும் என்ற ஒரு தவறான எண்ணம் எமது மக்களின் மத்தியில் வளர்க்கப்பட்டுள்ளது.

பொன் இராமநாதன் காலத்திலிருந்து இன்றைய விக்கினேஸ்வரன் வரையிலும் இப்படியான ஒரு போக்கே காணப்படுகிறது. இப்படியான முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களே தமிழ்ச்சமூகத்தின் அரசியல் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். விடுதலை இயக்கங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு என்பது வேறு கதை.

இப்பொழுது இந்தப் பாரம்பரியத்துக்கு மாறாக, மெய்யாகவே ஒரு புதிய மாற்று அணி உருவாகிக் களத்தில் ஆதிக்கம் பெற்று விடுமோ என்ற அச்சத்தில் பிரமுகர் அரசியலை விரும்புவோர் பதற்றமடைந்துள்ளனர்.

இவர்கள் மத்தியதர வர்க்கத்தின் சுபாவத்தின்படி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசக்கூடிய பிரமுகர்களைத் தவிர, வேறு எவரும் செல்வாக்குப் பெறுவற்கு விரும்புவதில்லை. இந்த இடத்தில் ஒரு மெய்ச் சம்பவத்தைச் சொல்வது பொருத்தமானது என எண்ணுகிறேன்.

வடமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களைப் பற்றிய பேச்சுவந்தபோது, விக்கினேஸ்வரனுக்குச் சார்பாக உயர் பதவி வகிக்கின்ற நண்பர்கள் மூன்றுபேர் கூட்டாக என்னோடு வாதிட்டனர்.

viki_CI  மாற்றுத் தலைமை என்றால் என்ன? கலர் மாற்றப்பட்ட வேதாளமா? - கருணாகரன்  (உயர்தர கட்டுரை) viki CIஇதற்கு அவர்கள் முன்வைத்த கருத்து “விக்கினேஸ்வரனுக்குச் சட்ட அறிவு தாராளமாக உண்டு. ஆகவே அவர் மத்திய அரசை – சிங்கள அரசாங்கத்தைச் சட்டரீதியாக வென்றெடுப்பார் அல்லது கட்டுப்படுத்துவார்” என்பதாகும்.

ஆனால், வடமாகாணசபையில் செய்யப்பட வேண்டிய சட்டவாக்கங்களையே செய்யாமல் நான்கு ஆண்டுகளாக ஆட்சி நடத்தியிருக்கிறார் விக்கினேஸ்வரன். அதற்கான சட்ட ஆர்வமும் அறிவும் அவரிடமில்லை என்று துணிந்து கூற முடியும்.

பல சந்தர்ப்பங்களிலும் அவருக்குச் சட்டவாக்கங்களின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சின்னத்துரை தவராஜாவே விளக்கிக் கொண்டிருப்பதை சமூகம் அறியும்.

இப்பொழுது விக்கினேஸ்வரனுடைய பிரமுகர் அரசியலின் சாயம் வெளுத்து விட்டது. அன்று விக்கினேஸ்வரனை ஆதரித்து வரவேற்றவர்கள், இப்பொழுது தலையைக் கவிழ்த்துக் குரலைத் தாழ்த்திக் கொண்டுள்ளனர்.

ஆகவேதான் படிப்பினைகளின் வழியே மாற்று அரசியலை முன்னெடுப்போரை – மக்களுக்கான அரசியலை விசுவாசமாக முன்னெடுப்போரை, மக்களுடன் சேர்ந்திருப்போரைக் கண்டறிய வேண்டியுள்ளது என்கிறேன்.

இது வானத்தை அண்ணாந்து பார்ப்பதன் மூலமாகக் கிடைப்பதல்ல. “தேவன் வருவார்” என்று காத்திருப்பதுமல்ல. இதற்கு வலுவான ஒரு சான்றாதாரத்தை இங்கே முன்வைக்கலாம்.

இன்று ஆகக்கூடிய பட்சமாக 13 ஆவது சட்டத்தைப் பற்றியும் மாகாணசபையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோமே, அது இந்தப் பிரமுகர் அரசியலின் விளைவாக வந்ததல்ல. மக்களோடும் மண்ணோடும் கிடந்து போராடிய போராளிகளுடைய செயற்பாட்டின் விளைவாக வந்த “முத்து” ஆகும்.

ஆகவே இனியும் ஒரு நல்ல, இதையும் விட மேலான  அதிகாரத்தைப்  பெறக்கூடிய அரசியலை முன்னெடுப்பதற்கு போராளிகளை ஒத்த செயற்பாட்டுக்காரர்களே அவசியம். அவர்கள் வேறு எங்குமே இல்லை. மக்களோடு மக்களாகவே உள்ளனர். அவர்கள்தான் மெய்யான மாற்றுச் சக்திகள். மாற்றங்களை நிகழ்த்தவல்ல வல்லமையாளர்கள்.

இதை வலியுறுத்தியே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த விடயத்தைக் குறித்து எழுதியிருந்தேன். வேறு சிலரும் மாற்றுத் தலைமைகளின் அவசியத்தைக் குறித்து எழுதியிருந்தார்கள்.

தமிழ் அரசியல் முன்னெடுப்பிற்கு மாற்றுத் தலைமை அவசியம் என்ற உணர்வு பொதுவாகவே எல்லாத் தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்களிடம் இந்த உணர்வு கூடுதலாக மேலோங்கியுள்ளது.

மக்கள் பல இடங்களிலும் தற்போதுள்ள தலைமைகளைக் குறித்து கசப்பான அனுபவங்களையே வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக தலைமைகளைக் குறித்து நம்பிக்கையிழந்த நிலையிலேயே பேசுகிறார்கள். இதை நான் ஒரு அவதானிப்பாகக் கொள்வதற்கு வடக்குக் கிழக்கில் உள்ள பல்வேறு நிலையிலுள்ளவர்களிடம் பேசிப்பார்த்தேன்.

தற்போதுள்ள தலைமைகள் எதுவும் சரியான முறையில் தமக்கான அரசியலை முன்னெடுக்கக்கூடியவையாக இல்லை. ஆகவே சரியான அரசியலை, மக்களுக்கு வெற்றிகளையும் நன்மைகளையும் தரக்கூடிய புதிய தலைமைகள் தேவை என்பதே அவர்களுடைய கோரிக்கையாக உள்ளது.

இதற்காக இன்னொரு பிரமுகரை அடையாளம் காட்டுவதற்கு அனுமதிக்க முடியாது. மக்கள் அதையே விரும்புகின்றனர் என்றால் அது தவறு.

மக்களைச் சரியாகச் சிந்திக்க வைக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சந்தர்ப்பத்தில் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போருக்குமுரியது. இதைச் செய்யவில்லை என்றால் மீண்டும் பிரமுகர் அரசியலே – மக்கள் விரோத அரசியலே, பழைய வேதாளமே முருங்கை ஏறும்.

– கருணாகரன்