தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்!

தமிழ்க் குறும் தேசியவாதம் அதற்குத் துணை போகிறது. தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்!

தமிழ், சிங்கள சந்தர்ப்பவாத அரசியல் கூட்டு

சமீப காலமாக தமிழர் தரப்பில் ஒரு சாரார் புதிய அரசியல் அமைப்பு நடவடிக்கைகளை நிராகரித்து வருவதோடு கூட்டமைப்பினரைத் துரோகிகளாக காட்டும் அரசியல் காணப்படுகிறது.

கூட்டமைப்பினர் அரசியல் அமைப்புத் தயாரிப்பில் தமிழ் மக்களின் தேசியம் தொடர்பாகவும், சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் அரசுடன் தெளிவான உடன்பாடுகளை எட்டாமல் நிபந்தனை அற்ற  விதத்தில் அரசை ஆதரிப்பதாக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள் மத்தியில் இதுவும் ஒன்றாக இருந்தது.

இதன் காரணமாக அரசியல் அமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை அதன் முன்னாள் சகாக்கள் உட்பட சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் இவ் விவாதங்கள் எவ்வாறான  அரசியலை  ஊக்குவிக்க உதவுகின்றன? என்பதை எடுத்தக் காட்ட விரும்புகிறேன்.

வட பகுதியிலே சில காலமாக மூன்று அமைப்புகள் ஒரே விதமாகப் பேசியும், செயற்பட்டும் வருகின்றன.

அதாவது தமிழ் சிவில் சமூக அமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பவைகளாகும். இம் மூன்று பிரிவினரும் தேசிய இனப் பிரச்சனையை இவ்வாறு வரையறுக்கின்றனர்.

அதாவது ‘இன்றைய இலங்கையின் அரச கட்டுமானம் என்பது சிங்கள பௌத்த தேசம் என்பதை உயர் பீடமாகக் கொண்ட மேலிருந்து கீழான அடுக்குகளைக் கொண்டதாகும்.

இந்த உயர் கட்டுமானத்திற்குள் வாழும் இதர தேசங்கள் ஆதிக்கமிக்க சிங்கள பௌத்த தேசத்தின் கீழ்படிவுள்ள சமூகங்களாகவே இயங்க முடியும்.’

‘இத்தகைய ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது அரசுக் கட்டுமானத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். அவ்வாறான மாற்றம் என்பது அத் தேசத்தில் வாழ்கின்ற சகல தேசியங்களும் சமத்துவமானவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதன் மூலமே சாத்தியமாகும்.’

இக் கருத்தை மட்டும் ஆழமாக பார்த்தால் சில உண்மைகளைக் காணலாம். அதாவது இன்று தேசிய இனப் பிரச்சனை இவ்வளவு கூர்மை அடைவதற்கான காரணம் என்ன?

கடந்த காலத்தில் தமிழ்த் தலைவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் என்ன? அவற்றிற்குக் கிடைத்த பதில்கள் என்ன? ஏமாற்றங்கள் என்ன? எனப் பார்த்தால் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மைத் தேசிய இனங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்தமையே பிரதான காரணமாகும்.

இப் பெரும்பான்மைச் சமூகம் இலங்கை என்பது பல்லின மக்கள் வாழும், பல மதங்கள் பின்பற்றப்படும் நாடு என்பதே இலங்கைச் சமூகத்தின் அடையாளம்  என்பதை ஏற்கத் தயாராக இல்லை என்பதே  அடிப்படை உண்மை.

இதற்கு வரலாற்றுக் காரணிகள் பல உண்டு.  உலகிலே  சிங்கள மொழி பேசும் ஒரே நாடு இலங்கை. தேரவாத பௌத்த மதத்தை மிக நீண்ட காலமாக பின்பற்றி வருவதாகவும், தாமே இலங்கையின் பூர்வீக குடிகள் எனவும் பெரும்பான்மையினர் கருதுகின்றனர்.

இன்று இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களின் தாயகங்களை கடவுள் தமக்கு வழங்கிய நிலம் என விவிலிய நூலை ஆதாரம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் ‘இந்துத்துவா’ கொள்கைகள் சிறுபான்மை மக்களுக்கான சம உரிமைகளை மறுக்கின்றன. அதே நிலைதான் சிங்கள மக்கள் மத்தியிலும் உள்ளதால் அதிகாரத்தைப் பகிர மறுக்கிறார்கள்.

இவை வரலாற்றுக் காரணிகள். இதனை வெறுமனே சிங்கள பௌத்த மதத்தைக் காரணம் காட்டுவது மிகமோசமான சந்தர்ப்பவாத அரசியலாகும். இது பெரும்பான்மைச் சமூகத்தோடு இணைந்து வாழ்வதைத் தடுக்கும் சூழ்ச்சி அரசியலாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய தாயகங்கள் எனக் கூறும் அரசியலும், அதில் முஸ்லீம் மக்களின் அபிலாஷைகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமையும் இவ்வாறான தெளிவான கோட்பாட்டு அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை.

சுயாட்சி, சுயநிர்ணய உரிமை என்பது அந்த மக்களின் ஜனநாயக உரிமை. தாமே இலங்கையின் பூர்வீக குடிகள் எனக் கூறும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் அரசியலிற்கும், வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்ற நிலைப்பாடுகளுக்குமிடையே பாரிய இடைவெளி இல்லை.

சிங்கள பௌத்தம் என அவர்கள் வாதிப்பதும், நாம் ஆண்ட பரம்பரை என தமிழர் தரப்பு வாதிப்பதும் ஒரே விதமான அரசியலே. இந்த அரசியல் புதிதானது அல்ல.

இதற்கும் ஒரு வரலாறு உண்டு. இதற்கான ஒரே வழி இலங்கை அரசு என்பது பன்மைத்துவ அடையாளங்களை உடைய நாடு.

எனவே ஏனைய சிறுபான்மை இனங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதே நியாயமானது என்பதைத் தொடர்ந்து வற்புறுத்துவதாகும். தற்போது அவற்றிற்கான மாறுதல்கள் காணப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பலப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும்.

இதன் அர்த்தம் தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களை, சுயநிர்ணய உரிமையை மறுதலித்துச் செல்வதாக அர்த்தம் கொள்ள முடியாது.

இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு எனக் கூறுவதன் உள்ளார்ந்த அர்த்தம் இதர தேசிய இனங்களின் இருப்பை, அடையாளங்களை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துவதாகும்.

வரலாற்று  நியாயங்களிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை 21ம் நூற்றாண்டின் மாற்றங்களோடும், சர்வதேச விதிமுறைகளுடனும் இணைந்து அழுத்துவதே இன்றுள்ள நடைமுறைத் தேவையாகும்.அதுவே சாத்தியமான வழிமுறையாகும்.

ஆனால் தமிழர் தரப்பிலுள்ள இப் பிரிவினர்; கூட்டமைப்பினைச் சாடுவதன்மூலம் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றனர்.

இதன் மூலம் அவர்களின் வெற்றிடத்தை, பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பலாமே தவிர இவ்வாறான அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது.

இந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்படுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வு இவ்வளவுதான் எனவும், எதிர் காலத்தில் அதற்கு மேல் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கூறி தமிழ் மக்களை இவர்கள் பயமுறுத்துகிறார்கள்.

அவர்களின் கருத்துப்படி இந்த அரசியல் அமைப்பு சாசுவதமானது. நீண்ட ஆயுள் கொண்டது, இதற்கு மேல் செல்லமுடியாது,மாற்ற முடியாதது.

தமிழீழம் சாத்தியமில்லாமல் போகலாம்என்ற போலி நம்பிக்கையைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம் தற்போதைய அரசியலமைப்பு முயற்சிகளை நிராகரிக்கும்படி கூறுகிறார்கள்.

இது எந்த வகையான யதார்த்த அரசியல்? அந்த மக்களின் வாழ்வு என்பது வெறும் அரசியல் கோரிக்கை மட்டும்தானா? பொருளாதார வாழ்வு பற்றிய திட்டங்கள் எங்கே? சுலோகங்கள் சோறு போடப்போவதில்லை.

தமிழ் மக்களை இவ்வாறான இக்கட்டான சூழலுக்குள் தள்ளியவர்கள் தமிழ்த் தலைமைகளே என்பதில் மறுப்பில்லை. ஆனால் தற்போதுள்ள அரசியல், எதிர்கால அரசியல் வாழ்விற்கு வாய்ப்பான தருணங்களைத் தரும் என நம்பினால் மக்கள் மீதான சுமைகளைக் குறைக்க அப் பாதையில் செல்லும்படி வற்புறுத்துவது சகல ஜனநாயக சக்திகளின் கடமை என நம்புகிறோம்.

அரசியல் அமைப்புத் தொடர்பான வாதங்கள் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளும் நிலை குலைந்து காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

ஏனெனில் ஒரு புறத்தில் ஜெனீவா அழுத்தங்கள். மறு புறத்தில் பொருளாதாரச் சிக்கல்கள். இவற்றிற்கு இத் தீவிரவாத சக்திகள் பதிலளித்தாக வேண்டும். நாடு மேலும் மோசமான நிலைக்குச் செல்லுமானால் அதற்கான பொறுப்பை இவர்களே ஏற்கவேண்டும்.

தற்போது காணப்படும் மாற்றங்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம். மகிந்த தரப்பின் பேச்சாளரான தயான் ஜயதிலகவின் கருத்துக்களிலிருந்து இந்த விவாதம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.

தமிழ் மக்களின் பிரச்சனை என்பது ஒரு முன்னேறிய சமூகம் தனது எதிர்கால வளர்ச்சியை உறுதிப்படுத்தும் விதத்தில் தனக்கான பாதுகாப்பான அரசியல் இடைவெளியைக் கோரி நிற்கிறது.

தனித்துவமான இச் சமூகம் இச் சிறிய தீவின் பிரதான சர்வதேச கடற்பாதைக்கு அண்மையிலும்,மிகச் சிறிய தூரத்திற்கு அப்பால் அதிகளவான சனத்தொகையையும், மிகப் பரந்த நிலப் பரப்பிற்கு அண்மையிலும் உள்ளது என தேசிய இனப் பிரச்சனை விபரிக்கப்படுகிறது.

அடுத்து யார் அத் தீவின் தலைவிதியைத் தீர்மானிப்பது? யார் கட்டுப்படுத்துவது? அல்லது யார் தொடர்ந்து கட்டுப்படுத்துவது? சிறுபான்மையினரா? அல்லது சிறுபான்மையினரின் கூட்டணியா? அல்லது இச் சிறுபான்மைக் கூட்டணியினருடன் வெளி உலகமும் இணைந்தா? அல்லது இதுவே எமது தாயகம். நாம் இணைந்தே வாழ்வோம் எனக் கருதும் மக்களா?

தமிழ் அரசியல்வாதிகள் பின்வரும் இரண்டு அம்சங்களுக்கிடையே சமநிலையைக் காண வேண்டும். அதாவது கூட்டு அடையாள முயற்சிகளுக்கும், இன்றுள்ள யதார்த்த நிலமைகளில் நிலைத்துச் செல்லக்கூடிய தீர்வுகளை ஏற்றுச் செல்வதா? என்பதற்குமான இடைப்பட்ட நிலையாகும். சுருங்கக் கூறின் அதி உயர் தீர்வை நோக்கிச் செல்வதா? அல்லது கிடைக்கக்கூடிய உச்சத்தை நோக்கிச் செல்வதா? என்பதாகும்.

அதி உயர்ந்த தீர்வை நோக்கிச் செல்வதாயின் அதாவது தற்போதைய மைத்திரி – ரணில் அரசு அதி உச்ச தீர்வைத் தரும் தரும் என எண்ணி தற்போது கிடைக்கவுள்ள வாய்ப்புகளை முற்றாக இழக்கும் நிலை ஏற்படலாம்.

இதற்குத் தயாரா? அல்லது பரந்த நல்லெண்ணத்துடன் அதாவது தற்போதுள்ள சூழலில் தெற்கு மக்களின் பரந்த சம்மதத்துடன் கிடைக்கும் தீர்வுகளை ஏற்று மேலும் போராடிச் செல்வதா? இவ்வாறு தேசிய இனப் பிரச்சனையை அதுவா? இதுவா? என்ற சிறிய பிரச்சனையாக குறுக்க முயற்சிக்கின்றனர்.

ஜனநாயகமா? பெரும்பான்மை சர்வாதிகார ஆதிக்கமா?

முதலில்இந்தக் கருத்துக்களில் காணப்படும் உள்ளார்ந்த நோக்கங்களை ஆராய்வோம்.

இலங்கைத் தீவில் தமிழர் வாழும் இடங்கள் பிரதான கடல் போக்கு வரத்திற்கு அண்மையில் இருப்பதாகவும், இந்தியாவிற்கு அண்மையில் இருப்பதாகவும், பாரிய சனத் தொகையும், பரந்த நிலப்பரப்பும் உள்ள நாடாக அதனை அடையாளம் காட்டப்படுகிறது.

உண்மையில் அதுவல்ல பின்னணி. தமிழ் நாட்டையே இவ்வாறு குறிப்பிட்டு பெரும் தொகையான தமிழர்கள் அப்பால் உள்ளார்கள். இதை உணர்ந்து செயற்படுங்கள் என சிங்கள மக்களுக்கும் உணர்த்தி இப் பிரச்சனை நியாயமான விதத்தில் தீர்க்கப்படாவிடில் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை எச்சரிக்கின்றனர்.

அடுத்து, அதிகபட்ச தீர்வை நோக்கிச் செல்ல விரும்புகிறீர்களா? அல்லது தெற்கின் சம்மதத்துடன் கிடைக்கக்கூடிய நியாயமான நீடிக்கக்கூடிய தீர்வை நோக்கிச் செல்லப் போகிறீர்களா? என்ற வாதமாகும்.

சமீப காலமாக புதிய அரசியல் அமைப்பை மக்கள் வாக்கெடுப்பிற்கு விடுவதா? அல்லது தற்போதைய அரசியல் அமைப்பில் சில சீர் திருத்தங்களை மேற்கொள்வதா? என்ற வாதம் இடம்பெறுகிறது.

அரசாங்கம் தற்போது மக்களின் ஆதரவை இழந்து வருவதாகவும், மகிந்த தரப்பினருக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் கூறி வெளிவரும் செய்திகளின் பின்னணியில் இந்த வாதம் மறைமுகமான பயமுறுத்தல்களுடன் நகர்த்தப்படுகிறது.

புதிய அரசியல் அமைப்பில் அதிகபட்ச அதிகார பரவலாக்கத்தை வழங்கப் போவதாக தற்போதைய அரசு கூறுகிறது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றுவதாகவும் கூறுகிறது.

அவ்வாறானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், மக்களின் அபிப்பிராய வாக்கெடுப்பில் 50 சதவீதத்திற்கு அதிகமாகவும் வாக்குகள் கிடைக்க வேண்டும். இது கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் அரச தரப்பில் காணப்படுகிறது.

ஆனால் அது சாத்தியமே என ஒரு சாரார் அடித்துக் கூறுகின்றனர். அதாவது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவிற்குக் கிடைத்த சிங்கள பௌத்த வாக்குகள் ஒட்டு மொத்த வாக்குகளில் 42 சதவீதம் எனவும், அதுவும் அரச அதிகார வாய்ப்புகளைப் பயன்படுத்தியும், அதிக பணம் செலவழித்தும் பெற்றார்கள்.

எனவே தற்போது அந்த 50 சதவீதத்தை எட்டும் அளவிற்கு அவர்களால் வாக்குகளைப் பெற முடியாது. எனவே மக்களை நியாயமான விதத்தில் அணுகினால் வெற்றி சாத்தியமே என அவர்கள் வாதிக்கின்றனர்.

இந்தக் கருத்தின் பலம் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளுக்குப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே மகிந்த தரப்பின் மதி உரைஞரான தயான் ஜயதிலகவின் வாதங்கள் பின் குறிப்பிட்டவாறு செல்கின்றன.

மகிந்த தரப்பினர் ஜனாதிபதி ஆட்சியை மாற்றுவதையும், புதிய அரசியல் அமைப்பிற்குச் செல்வதையும் எதிர்ப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள 70 சதவீத சிங்கள பௌத்த மக்களின் 35 சதவீத ஆதரவு புதிய அரசியல் அமைப்பிற்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கும் வாதத்தை ஏற்கும் அவர், அவ்வாறானால் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றி நிரந்தர தீர்வை எட்ட முடியுமா? எனக் கேள்வி எழுப்புகிறார்.

அதாவது பெரும்பான்மையினரில் சிறுபான்மையினரின் ஆதரவையும், சிறுபான்மையினரில் பெரும்பான்மையினரின் ஆதரவையும் பெற்று அரசியல் அமைப்பை நிறைவேற்ற எண்ணுகிறீர்களா? அவ்வாறானால் 1972ம் ஆண்டின் யாப்பிற்கு நடந்தது போல இந்த யாப்பின் ஆயுட்காலம் மிகக் குறுகியதே என ஆருடம் கூறுகிறார்.

வாசகர்களே!

தற்போதைய புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் எதிர்நோக்கும் பாரிய தடைகளை விளக்கவே இவற்றைத் தந்தேன். குறைந்த பட்சம் 13வது திருத்தத்தையே முழுமையாக நிறைவேற்றுவது சிக்கலாகியுள்ள இன்றைய நிலையில், அச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு முன்பை விட சில மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த முயற்சியை ஆதரிப்பதா?

அல்லது இந்த வாய்ப்பையும் நழுவ விட அனுமதிப்பதா? என்பதே எம் முன்னால் உள்ள கேள்வியாகும். இவை தமிழர் கூட்டமைப்பு மட்டும் எதிர்நோக்கும் பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த சிறுபான்மைத் தேசிய இனங்களும், குறிப்பாக தமிழ் மக்களும் எதிர்கொள்ளும் சவாலாகும்.

கூட்டமைப்பினரை இம் முயற்சியில் முழுமையாக ஈடுபட வைக்கவேண்டும். இதற்காக ஒட்டு மொத்த தமிழ் மக்களும் வேறுபாடுகளுக்கு அப்பால் பலத்தை வழங்க வேண்டும். இவ் வரலாற்றுத் தவறுகளுக்கு அவர்களும் உடந்தை என்பதால் அத் தவறுகளுக்கான பரிகாரத்தைத் தேடுவதற்கு அவர்கள் தற்போது தேர்ந்தெடுத்த வழிமுறையை முழுமையாக அடைய வாய்ப்பை வழங்கவேண்டும்.

இம் முறையும் சாத்தியப்படாவிடில் அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி புதிய தலைமுறைக்கு வழி விட வேண்டும். இம் முறை இந்த முயற்சி தோல்வி அடையுமானால் அவ் வரலாற்றுத் தவறிற்கு சிங்கள சமூகமே முழுமையாகவே பதில் கூற வேண்டும்.

ஏனெனில் தமிழ் அரசியல் தற்போது காத்திரமான மாற்றத்தை நோக்கிச் சென்றுள்ளது. சர்வதேசமும் எமது நிலைப்பாட்டை ஆதரித்துள்ளது.

புதிய அரசியல் யாப்பு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் அது சிங்கள பேரினவாதத்திற்குக் கிடைத்த தோல்வியாகும். ஏனெனில் தமிழ் மக்கள் பன்மைத்துவ ஜனநாயகத்தை நோக்கியே சென்றார்கள். பேரினவாத அரசியலே ஜனநாயக பன்மைத்துவத்தை நிராகரித்தது.

அது மட்டுமல்ல இந் நிலை நீடிக்குமானால் அதாவது இலங்கை அரசு தொடர்ந்து தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்துச் செல்லுமானால் இன்று நடைமுறையிலுள்ள நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் நிச்சயமாக தோல்வி அடையும்.

ஏனெனில் தேசிய சமாதானம் குலைந்ததால் ஸ்திரமான ஆட்சி ஏற்படாது. ஸ்திரமான ஆட்சி இல்லையேல் சர்வதேச முதலீடு சாத்தியமில்லை. எனவே சர்வதேசமும் தனது முதலீடுகளை, நலன்களைப் பாதுகாப்பதற்காக இப் பிரச்சனையில் தவிர்க்க முடியாமல் தலையிட நேரிடும்.

மேற்குறித்த விவாதங்களையம், ஆதாரங்களையும் பார்க்கையில் முன்னெப்போதையம் விட அதிக சாத்தியங்கள் காணப்படுவதால் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் நிராகரித்துச் செல்வது அவசியமானது.

தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழ் சமூகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் இவை என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போதைய அரசியல் அமைப்பு யோசனைகளில் தமிழ் மக்கள் முழுமையாக ஈடுபடுவது சாலச் சிறந்தது.

முற்றும்.

வி. சிவலிங்கம்