நாம் பட்ட வேதனைக்கு என்ன தீர்வு? விடுதலையான நபரின் மனைவி!

கடந்த இரண்டு வருடங்களாக தமது குடும்பம் பட்ட வேதனைக்கும் துன்பத்துக்கும் யார் உதவி செய்வார் என்று விடுதலையான நபரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய வித்தியா கொலைவழக்கு நீதிமன்றத் தீர்ப்பில் விடுதலையான இரண்டு நபர்களில், முதலாம் இலக்க சந்தேக நபர் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பூபாலசிங்கம் இந்திரகுமாரின் மனைவியே இந்தக் கேள்வியினை முன்வைத்துள்ளார்.

மேலும் தனது கணவர் கைதாகி சிறையில் இருந்த காலத்தில தனது குடும்பம் சொல்லெணாத் துன்பங்களை அனுபவித்ததாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

”மாணவி வித்தியா படுகொலை செய்யபட்ட சம்பவம் நடந்து, எனது கணவரைக் கைதுசெய்தபின் எங்கள் வீடு மற்றும் உடமைகளை அழித்தார்கள். எங்களது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் யாழ்ப்பாணம் நகரில் உறவினர் வீட்டிலேயே இதுவரை தங்கியிருந்தோம்.

அங்கு எமது வாழ்வாதாரத்தேவைகளுக்கு உதவுவதற்கு யாருமே முன்வரவில்லை. இதன்காரணமாக நானும் எனது பிள்ளைகளும் யாழ் கோட்டைப் பகுதியில்கச்சான் கடலை வியாபாரம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக எமது பிள்ளைகளுக்கு பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுதும் யாழ் நீதிமன்றில் அந்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

இரண்டரை வருடங்களின்பின்னர் எனது கணவர் இன்று விடுதலையாகியுள்ளார். இது ஒரு மகிழ்ச்சி நிறைந்த சம்பவமாக இருந்தாலும் இரண்டரை வருடங்களும் எமது குடும்பம் சந்தித்த வேதனைகள் சொலில் அடங்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein தாயகச்செய்திகள்