மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டாம் – துளசி

மாவீரர் துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டாம். உயிரியல் பூங்காக்களை உங்கள் வேலிகளுக்குள் அமையும், தாயக கனவுகளை இதயங்களில் சுமந்தவர்களை புதைத்திருக்கின்றோம். துயிலும் இல்லங்களை உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டாமென ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார்.

யாழ்.நல்லூர் பகுதியில் இன்று (26.09) இடம்பெற்ற தியாக தீபம் திலிபனின் 30வது ஆண்டு நினைவு தின அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் விடுதலைக்காக இந்த உலகிற்கும் காந்திய தேசத்திற்கும் புதியதொரு அரசியல் பாதையினை விட்டுச் சென்றுள்ளார். தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் ஏற்பாடுகளின் அடிப்படையில் திலீபன் ஜனநாயகத்திற்கான பாதையினை 1987 ஆம் ஆண்டே திறந்து காட்டியிருந்தார்.உதாசீனம் செய்யப்பட்டார். மரணம் அடைய வைக்கப்பட்டார்.

அதன்பின்ன் வீறுகொண்டு எழுந்த விடுதலைப் போராட்டம் இந்த மண்ணில் ஆயிரம் ஆயிரம் வேங்கைகளை நகர்த்திச் சென்று 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்று மீண்டும் புதியதொரு ஒழுங்கிற்கு அமைவாக பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

இன்று எந்தப்படைகளுக்கு எதிராக தியாகதீபம் திலிபன் உண்ணாவிரதம் இருந்தாரோ அந்தப் படைகளுக்கான நினைவுத் தூபிகள் இந்த மண்ணில் புனருத்தாபனம் பெற்று வருகின்றது. இந்த மக்களின் விடுதலைக்காக தன்னுயிர் நீத்த தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபியை பார்க்கின்ற போது, வேதனையாக இருக்கின்றது. எமது மக்களும் சர்வதேசமும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகவும்,ஜனநாயகம் தொடர்பாகவும், இந்த நாடு எம்மை எப்படி வைத்திருக்கின்றதென்று இந்த திலிபனின் நினைவுத் தூபி காட்சியாகவும், சாட்சியாகவும் இருக்கின்றது.

இந்த மண்ணை நேசித்தோம், இந்த மக்களுக்காக தலைவர் பிரபாகரன் வகுத்துக்கொண்ட கொள்கைகளுக்காக போராடியும், எம்மோடு தோளோடு தோள் நின்ற ஆயிரம் ஆயிரம் வேங்கைகளை விதைத்து விட்டு வந்திருக்கின்றோம்.

சிறைச்சாலைகளில் இருந்து வந்தபிறகும் போராளிகள் அரசியலுக்கு வந்திருப்பதென்பது 2009 யுத்த களத்தில் ஏற்பட்டதன் பின்னர் தான் என்பதனை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
இந்த போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, எதை நோக்கி நகர்ந்ததோ, அதில் முக்கியமாக தமிழ் மக்களின் உரிமைகள் புதியதொரு வழிமுறைகளுக்கு ஊடாக வென்றெடுப்பதன் மூலமே இந்த போராளிகள் அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றார்கள்.

தியாகி திலீபன் தமிழீழ கோரிக்கையினை முன்வைத்து தனது உண்ணாவிரத போராட்டத்தினை இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதிராக ஆரம்பித்தவர்.
அவர் வைத்த 5 அம்ச கோரிக்கைகளும் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. சிங்கள குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, அவசரகாலச் சட்டம், புதிய பொலிஸ் நிலையங்களை தாயக பிரதேசத்தில் அமைத்தல், ஊர்காவல் படையினரிடம் ஆயுதக் களைவ உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

இன்று 30 வருடம் கழிந்த பின்னும் அவ்வாறான நெருக்கடியில் தான் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். எமது மக்களே சிந்தியுங்கள். உலகம் ஆயுதப் பொறிமுறைகளையோ, வன்முறைக் கலாசாரத்தினையோ குறைத்துக்கொண்டு, இணைந்து செயற்படுவதாக இல்லை.

இந்த உலகம் ஒற்றுமையையே வலியுறுத்துகின்றது. 89 ஆயிரம் விதவைகளைக்கொண்ட சமூகத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அநாதைகள் வடகிழக்குப் பகுதியில் இருக்கின்றார்கள். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உடம்பில் குண்டுச் சிதறல்களுடன் இருக்கின்றார்கள். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகள் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுகின்றார்கள்.

கடற்றொழிலாளியும், விவசாயியும் பசியோடு உறங்கிக்கொண்டிருந்தால், இந்த சமூகம் அபிவிருத்தி அடைந்ததாகவோ, உரிமைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவோ கருதிவிட முடியாது.
துமிழர்களுக்கான அரசியல் என்பது, நீங்கள் தமிழீழத்தினைப் பெற்றுத்தர வேண்டிய அரசியல் செய்யும் தேவை இல்லை. இந்த மக்களை பொருளாதார ரீதியாக வெளியில் கொண்டு வந்து அபிவிருத்தி அடைந்த சமூகமாக மாற்றிக் காட்டுங்கள்.

இளைஞர்களின் கைகளில் அரசியலைக்கொண்டு சேர்ப்பதற்கு அனைவரும் தயாராகுங்கள். குறுகிய காலத்திற்குள் அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.

சுயநல வேறுபாடுகளைக் கடந்து, கட்சி பேதங்களை மறந்து கொள்ளை அடிப்படையில் விட்டுக்கொடுப்புக்களைச் செய்து, ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும். மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இளைஞர்களை ஒன்றிணைத்து அரசியல் பாதையில் பயணிப்பதன் மூலமே மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமென நம்புகின்றோம்.

துயிலும் இல்லங்களை துயிலும் இல்லங்களாகவே பாருங்கள். உயிரியல் பூங்காவாக மாற்ற வேண்டிய தேவை இல்லை. அங்கே புதைத்திருப்பவர்கள், தாயக கனவுகளை தங்களின் இதயங்களில் தாங்கியவர்களை தான் புதைத்திருக்கின்றோம். துயிலும் இல்லங்களை எவ்வாறு புனருத்தாபனம் செய்ய வேண்டுமென போராளிகள் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம். உயிரியல் பூங்காக்களை அமைப்பதாயின் உங்களின் வேலிகளுக்குள் அமைத்துக்கொள்ளுங்கள். களத்தில் நின்று போராடியவர்கள். எமது தோள்களில் வீரர்களை சுமந்திருக்கின்றோம்.
இரத்தமும் தசையுமாக தமிழ் தேசியத்திற்காக உயிரைக்கொடுத்தவர்கள் நாங்கள். இன்று தமிழ் தேசியம் எந்த திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. போராளிகளுக்காகவும், புலம்பெயர் மக்கள் தாயகத்தில் போராடியவர்களுக்காக உங்கள் கரங்களை உயர்த்துங்கள். மக்களுக்காகவும் 10 வீதம் கொடுப்பீர்களாக இருந்தால், எமது மக்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.