பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 696 பேர் கைது

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடந்த 2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் 696 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் குறித்த காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் யாவை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் வழங்கிய பதிலில், 2013 இல் 156 பேரும், 2014 இல் 252 பேரும், 2015 இல் 128 பேரும், 2016 160 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். எனினும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் வழக்கு தொடரப்பட்டதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Allgemein