வடகொரியா மீது புதிய பொருளாதார

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சோதனையை நடத்தி வருகிறது.

இதன் காரணமாக வடகொரியா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை ஐ.நா விதித்துள்ளது.

இந்நிலையில், சில புதிய தடைகளை அந்நாட்டின் மீது விதிக்க வேண்டும் என கூறிய அமெரிக்கா வரைவு தீர்மானத்தை இயற்றி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சியில் விட்டது.

புதிய தீர்மானங்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 15 உறுப்பு நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன

புதிய பொருளாதார தடைகள் வருமாறு,

வடகொரியாவுக்கு கச்சா எண்ணெய் மற்றும் எண்ணெய் பொருட்கள் ஏற்றுமதி செய்வது மட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அந்நாட்டின் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்ற எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

வட கொரியாவில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படும். இதன் காரணமாக 700 மில்லியன் டொலர் வடகொரியாவுக்கு இழப்பு ஏற்படும்.

வெளிநாடுகளில் உள்ள வடகொரிய தொழிலாளர்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்பட மாட்டாது. இதனால் வடகொரியாவுக்கு ஆண்டுக்கு 500 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்.

ஐ.நா. விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, எங்கள் மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா அழுத்தம் தந்தால் அதன் விலையை அந்நாடு கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

Allgemein உலகச்செய்திகள்