அமெரிக்கா தீர்மானத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா

வடகொரியா மீது சமீபத்தில் தான் பொருளாதார தடை விதிக்கப்பட்டது, ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த வாரம் கூட சுங்ஜிபேகாம் பகுதியில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்தது. இந்த பரிசோதனை முழுமையான வெற்றி பெற்றதாக வடகொரியா தெரிவித்திருந்தது.

வடகொரியாவின் இந்த செயல்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.

அந்த தீர்மானத்தில் பெட்ரோல் போன்ற எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்வதற்கு தடை, வடகொரியாவில் தயாரிக்கப்படும் ஜவுளி போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை மற்றும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-க்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்கு தடை போன்றவைகள் இடம் பெற்றிருந்தன.

இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.

இதில் ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கம் வகிக்கும் நாடுகளான சீனா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் மற்றும் தற்காலிக உறுப்பு நாடுகளும் ஆதரித்து வாக்களித்தால் இந்த தீர்மானம் நிறைவேறும்.

வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பு அந்தஸ்து கொண்டுள்ள ஏதாவது ஒரு நாடு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் தீர்மானம் செயலற்றதாகிவிடும் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் நிறைவேறுமானால், அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்காவின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Allgemein உலகச்செய்திகள்