மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள பவுண்ட்! அதீத வளர்ச்சியில் யூரோ

பிரித்தானிய பவுண்ட் மிக மோசமான நிலையை அடைந்துள்ளதாக புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்த வருடத்தின் ஒகஸ்ட் மாதம் வரையிலான 11 மாத காலப் பகுதியில் பாரிய வீழ்ச்சியை பவுண்ட் பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதில் நிச்சயமற்ற தன்மை மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக, உலக முதலீட்டாளர்கள் முதலீட்டுகளை தவிர்த்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த மாதத்தின் கடைசி நாளான நேற்று டொலர் மற்றும் யூரோ ஆகிய இரண்டிற்கும் இடையில் பவுண்ட் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய சர்வதேச நாணங்களுடன் ஒப்பிடும் போது 3 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கடந்த 10 மாதங்களாக அதன் மோசமான செயல்திறனை குறிப்பதாக பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யூரோவிற்கு எதிராக பவுண்ட் நான்காவது மாதமாகவும் தொடர்ச்சியான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுவதற்கான பேச்சுவார்த்தைகள் மந்தமான நிலையை அடைந்துள்ளமையால், அடுத்து வரும் மாதங்களிலும் பவுண்ட் மேலும் பலவீனத்தையே வெளிப்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை யூரோ வலுவான தரவுகளால் சமநிலையை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்படுகின்றது.

நடப்பாண்டில் யூரோ டொலருக்கு எதிராக 10 சதவீதத்திற்கும் அதிகளவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் அடுத்தாண்டின் ஆரம்பத்தில் ஒரு பவுண்டுக்கு ஒரு யூரோ என்ற மதிப்பு நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Allgemein உலகச்செய்திகள்