யுத்த குற்ற விசாரணை விவகாரம்: இலங்கைக்கு மீண்டும் தலையிடி

நாடாளுமன்றின் அனுமதியைப் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி ரணில் தலைமையிலான அரசாங்கம் அமைக்காதது தொடர்பில் ஐ.சீ.ஜே என்ற சர்வதேச சட்டவாளர் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அதேவேளை யுத்தக் குற்றங்கள் உட்பட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக வழங்கிய வாக்குறுதிகளையும் தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் சர்வதேச சட்டவாளர் அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

சட்டமாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைப் படுத்தாது தொடர்ந்தும் தாமதப்படுத்திவருவதால் மைத்ரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு அதிகளவில் வாக்களித்த தமிழ் மக்கள் நம்பிக்கையை இழந்து வருவதாக ஐ.சீ.ஜே என்ற சர்வதேச சட்டவாளர் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நிலைமாறு கால நீதிப் பொறிமுறை உண்மை ஆணைக்குழு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணைக்குழு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாக சர்வதேச சட்டவாளர் அமைப்பபு சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பில் நாட்டு மக்களின் கருத்துக்களை அறிவதற்காக நியமிக்கப்பட்ட 11 பேர் அடங்கிய விசேட செயலணி முன்வைத்த பரிந்துரைகளையும் உதாசீனம் செய்துள்ளமை குறித்தும் சர்வதேச சட்டவாளர் அமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

நிலைமாறு நீதியை நிலைநாட்டுவதில் எந்தவித முன்னேற்றத்தையும் ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தாமை கவலைக்குறிய விடையம் என்று தெரிவித்துள்ள சர்வதேச சட்டவாளர் அமைப்பு இனியும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றாது அவர்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளை சர்வதேச அரங்கிலும உள்நாட்டிலும் ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திற்கு யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தையும் அரசாங்கம் கைநழுவிச் செல்வதற்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச சட்டவாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Allgemein