சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டு விழாவும், சமூக உதவிப்பணிகள் வழங்கும் வைபவமும்.

ஈழத்தின் வவுனியாவில் இடம்பெற்ற ‚பிருந்தாவனம்‘ சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டு விழாவும், சமூக உதவிப்பணிகள் வழங்கும் வைபவமும்.

வவுனியாவிலிருந்து ஆசிரியர் சிவராணி நெறிப்படுத்தலில் வெளிவரும் ‚பிருந்தாவனம்‘ சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டு விழாவும், சமூக உதவிகள் வழங்கும் நிகழ்வும் 27.08.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு வவுனியாவிலுள்ள நகர விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமை வகித்தார். நிகழ்வுகளை படைப்பாளியும் அறிவிப்பாளருமான இ.இராஜேஸ்வரன் தொகுத்து வழங்கினார்.

சுடர்கள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை மாணவி சது இசைத்தார்.

வரவேற்பு நடனத்தினை கருமாரி அறநெறிப் பாடசாலை மாணவிகள் வழங்கினர். வரவேற்புடன் கூடிய தலைமையுரையினை வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் நிகழ்த்தினார். வாழ்த்துரையினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் உமா இராசையா வழங்கினார்.

நிகழ்வில் முக்கிய அம்சமாக ‚பிருந்தாவனம்‘ சஞ்சிகையின் மூன்றாவது ஆண்டுச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. இதழின் வெளியீட்டுரையினை புளியங்குளம் ஆசிரிய நிலைய முகாமையாளர் ச.ஜெயச்சந்திரன் நிகழ்த்தினார். சிறப்பிதழினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட முதற்பிரதியினை கிளிநொச்சி யாழரசி வர்த்தக நிலைய உரிமையாளர் சிறீகாந்த் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் இதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் சுவிட்சர்லாந்து ‚தந்தை தாயக உறவாலயம்‘ தொண்டமைப்பு ஊடாக மாணவர்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

‚முகநூல் ஆரோக்கியமானதா? ஆபத்தானதா? எனும் தலைப்பில் யோ.புரட்சி தலைமையில் விவாத அரங்கு இடம்பெற்றது. இவ்விவாத அரங்கில் யாழ் பல்கலைக்கழக மாணவி வேதிகா பிரபாகரன், உயர்தர வகுப்பு மாணவன் மிதிலைமாறன், கவிஞர் காக்கேயன்குளம் உசேன், அறிவிப்பாளர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதம விருந்தினர் உரையினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்தினார். ‚சிற்றிதழ்களின் வரலாறு‘ எனும் பொருளில் பன்முகப் படைப்பாளர் தமிழ்மணி மேழிக்குமரன் உரை நிகழ்த்தினார்.

பிற கலை நிகழ்வுகளாக ற.அனோஜிகா, தர்சினி ஆகியோரின் நடன ஆற்றுகைகளும், இந்துமதி ஆசிரியையின் நெறியாள்கையில் ‚வள்ளி‘ நாட்டியமும் இடம்பெற்றன. ஓமந்தை மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் அரசரத்தினம் ‚பிருந்தாவனம்‘ இதழ் பற்றிய கண்ணோட்டத்தை பகிர்ந்தார்.

ஏற்புரையுடன் கூடிய நன்றியுரையினை ‚பிருந்தாவனம்‘ சஞ்சிகையின் ஆசிரியர் சிவராணி வழங்கினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட யாவருக்கும் மதிய போசனம் அளிக்கப்பட்டது.

பெண் படைப்பாளி ஒருவரது தலைமையில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் ‚பிருந்தாவனம்‘ சஞ்சிகையின் மூன்றாமாண்டு விழாவானது சமூக அக்கறையுடன் கூடிய ஒன்றாக அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுக்கு சுவிட்சர்லாந்து ‚தந்தை தாயக உறவாலயம்‘ அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது.