போரில் குற்றம் புரிந்தோருக்கு மன்னிப்பே கிடையாது; புதிய கடற்படைத் தளபதி

யுத்தத்தின்போது எவ்வகையான வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் சீருடையை அணிந்துகொண்டு குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் அதனை மன்னிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்காவின் புதிய கடற்படைத் தளபதியும், அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது தமிழருமான வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் நிரூபிக்கப்படும்வரை அனைவருமே நிரபராதிகள் என்றும் எம்மால் யாரையும் நியாயம் தீர்க்கவும் முடியாது எனவும் தெரிவித்த கடற்படைத் தளபதி, அனைத்தையும் சட்டத்தின் கையில் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட தமிழரான வைஸ் அட்மிரல் சின்னையா, இன்றைய தினம் தனது முதலாவது ஊடக சந்திப்பை கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடத்தினார்.

இந்நிலையில் கடந்த காலங்களாக கொலை, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவில் முன்னாள் கடற்படைத் தளபதி உட்பட பல சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.

எனவே கடற்படைக்கு ஏற்பட்டுள்ள இப்படியான கறும்புள்ளிகள் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஊடகவியலாளர்கள், கடற்படைத் தளபதியிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா “எதுமே நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளாகும். எவரையும் நியாயம் தீர்ப்பதற்கு எம்மால் முடியாது. அதனை சட்டத்தின் கையில் ஒப்புவிக்க வேண்டும். ஒரு கடற்படைத் தளபதியாக இதனைக் கூறுகின்றேன். எமக்கு ஒரு நீதிமன்றம் இருக்கிறது. அதேபோல கடற்படைச் சட்டமும் காணப்படுகிறது. அந்த வகையில் ஏதாவதொரு குற்றச்சாட்டில் சிக்கியிருந்து அது சிவில் அல்லது கடற்படை மன்றில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். சீருடையில் ஏதாவது குற்றங்களை செய்திருந்தாலும் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். இராணுத் தளபதி அண்மையில் இப்படியொரு விடயத்தைக் கூறியிருந்தார். இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொலைகாரராக முடியாது. அதேபோல கொலைகாரருக்கு இராணுவ வீரராக முடியாது. நானும் அதற்கு உடன்படுகிறேன். நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் அல்லது குற்றத்தை நீங்கள் செய்திருந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. நீங்கள் போரில் எவ்வளவு பெரிய காரியங்களை நிகழ்த்தியிருந்தாலும் பெரிய ஹீரோவாக விளங்கியிருந்தாலும் அது கணக்கில் எடுக்கப்படாது. இந்த சீருடை எந்த கொலைக்கோ அல்லது குற்றங்களுக்கோ அனுமதிக்காது. அதேபோல சித்திரவதைகளை செய்யவும் அனுமதிக்காது. இந்த விடயத்தில் இதுவே எனது நிலைப்பாடாகும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையா அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏயின் உறுப்பினர் என்றும், அவரால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக விமல் வீரவன்ச அண்மையில் பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக கடற்படைத் தளபதியிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

“அமெரிக்க முகவராக நியமிக்கப்பட்டால் அது எமது நாட்டிற்கே நன்மையாகும். அப்படி நியமிக்கப்பட்டால் அதிகமான வேலைகளை செய்துகொள்ள முடியும். அமெரிக்க முகவராகினால் அடுத்தபக்கம் மாற்றுவதற்கு முடியும் என்று இலங்கையர்கள் நினைத்தால் அவ்வாறு முடியாது என்று நான் நினைக்கின்றேன். நாங்கள் நாட்டிற்காக 35 வருடங்கள் யுத்தம் செய்தவர்கள். அவ்வளவு சுலபமாக மாற்றுவதற்கு முடியாது. நான் அமெரிக்க பசுபிக் கமான்டராக பணிபுரிந்தபோது அங்கிருந்து பயிற்சி, பொருட்கள், கன்னிவெடி மீட்பு, மீள்குடியேற்றம் என்வற்றை கற்றுவந்து எமது படையினரை விருத்தி செய்வதற்கே நான் முயற்சித்தேன். மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வராமல் அங்கிருந்தே பணிசெய்திருக்கலாம். ஆனால் அங்கு சென்றாலும் எமது படை, நாட்டின் அபிவிருத்தியையே நான் செய்தேன். இதுகுறித்து பலர் பலவிதமாகவும் சித்தரிக்கலாம். ஆனால் அதில் உண்மையிருக்காது” என்றார்.