நெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்

நெடுந்தீவிலே கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் மருதங்கேணியில் ஏன் குடிநீராக மாற்ற முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபை கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுக்கான சிறப்பு அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் உரையாற்றுகின்ற போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழ்குடா நாட்டிலே குடிநீர் பிரச்சினை மிகவும் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. குடிநீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் இடம்பெயரக்கூடிய ஏதுநிலை காணப்படுகின்றது.

பூநகரியில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 

இரணைமடுவில் இருந்து நீரைத்தர முடியாது என ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கின்றார். மருதங்கேணியில் கடல் நீரை குடிநீராக மாற்ற அனுமதிக்க முடியாது என இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் மறுக்கின்றார்.

நாங்கள் பலவந்தமாக நீரை கொண்டுவர முயற்சிக்கவில்லை. கிளிநொச்சியல் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும் கிளிநொச்சிக் கிராமங்களுக்கும் பூநகரிக்கும் குடிநீர் வழங்கிய பின் மேலதிகமாக தண்ணீர் இருந்தால் யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியும்.

ஏனைய காலங்களில் மருதங்கேணியில் இருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும். நெடுந்தீவிலே கடல் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகின்றது. அங்கே மீன்வளம் அழிவடையக்கூடிய பிரச்சினை காணப்படவில்லை.

அப்படியிருக்கையில் மருதங்கேணியில் மட்டும் எப்படி அவ்வாறான பிரச்சினை ஏற்படும் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு யாழ் குடா நாட்டிற்குப் குடிநீரை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சுமார் 23000 கோடி ரூபா செலவில் குடா நாட்டிற்கான குடிநீர் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான செயற்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நிதி மீளச் செல்லாமால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

Allgemein தாயகச்செய்திகள்