பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு நிரந்தர வதிவு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய செய்தி!

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்குப் பின்னர் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பங்கள் மேற்கொண்டவர்களுக்கு முடிவுகளை அனுப்பாமல் உள்விவகாரத் திணைக்களம் இழுத்தடித்து கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயமே.

இதனால் தமிழ் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றார்கள்.

அவர்களால் வீடுகள் வாங்குதல், கடைகள் வாங்குதல், வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் பெறுதல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல், திருமணம் செய்தல், மனைவி, கணவன்மாரை ஸ்பொன்சர் செய்தல் போன்ற பல விடயங்களை ஒத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக லங்காசிறி செய்திச் சேவை பிரித்தானியாவிலுள்ள Jay Visva சட்டவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினவியது.

01.இந்த விடயம் தொடர்பில் நீங்கள் எங்கள் வாசகர்களுக்கு என்ன கருத்து தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?

நீண்டகாலமாக விண்ணப்பங்களுக்கு முடிவுகள் வராமல் இருக்கும் நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் விண்ணப்பித்தவர்கள் சிலருக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளதாக அறிகின்றோம்.

மேலும், பல விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கடந்த மே மாத காலப் பகுதியில் உள்விவகார அமைச்சுக்கு இதற்குரிய காரணங்களைக் கேட்டு Freedom of Information Act 2000 இன் கீழ் எழுதியிருந்தது.

இவ்வாறான விண்ணப்பங்கள எவ்வளவு நிலுவையில் உள்ளன? முடிவெடுக்கப்படாமல் இருப்பதற்குரிய காரணம் என்ன? உள்விவகார அமைச்சு எப்பொழுது முடிவெடுக்கப் போகின்றது? போன்ற கேள்விகளை நாங்கள் கேட்டிருந்தோம்.

அதற்கு பதில் அளிக்கையில், 2016.12.31 வரைக்கும் உள்ள தகவல்களின் அடிப்படையில், 550 விண்ணப்பங்கள் 6 மாதத்திற்கு மேலதிகமாக நிலுவையில் உள்ளன.

அதில் 185 விண்ணப்பங்கள் ஒரு வருடத்திற்கு மேலாக நிலுவையில் உள்ளதாக எனவும், அத்துடன், 98 வீதமான நேர்த்தியான (சிக்கல் இல்லாத) விண்ணப்பங்களை 6 மாதங்களுக்குள் முடிவெடுக்க முயற்சிப்பதகாவும், அவ்வாறு முடிவெடுக்க முடியாத பட்சத்தில், தாங்கள் அதற்கான காரணத்தை விளங்கப்படுத்துவதற்கு விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்வோம் என்றும், இயன்றளவு விரைவில் தாங்கள் இவ்வாறான விண்ணப்பங்களுக்கு முடிவுகள் எடுப்போம் என்றும் உள்விவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

2. உள்விவகார அமைச்சினுடைய பதிலுக்கு உங்கள் கருத்து என்ன?

உள்விவகார அமைச்சு தெரிவித்த பதில்கள் எந்த வகையிலும் திருப்திகரமானதாக இருக்கவில்லை. 2016 வரைக்குமே 550 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

இந்த வருடம் ஏற்கனவே 8 மாதங்கள் கடந்துவிட்டன. பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் இந்த வருடமும் மேற்கொள்ளபட்டிருக்கலாம். ஆகவே பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளதாகவே தென்படுகின்றன.

அத்துடன், தாங்கள் விண்ணப்பதாரர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு விளங்கப்படுத்துவதாக உள்விவாகார அமைச்சு தெரிவிக்கின்ற போதிலும், அவர்கள் விண்ணப்பதாரர்களுக்கு ஒரே மாதிரியான கடிதத்தையே அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது உங்களுடைய விடயம் சிக்கலானது, எங்களால் முடிவெடுக்க முடியவில்லை. இன்னும் 3 மாதங்களோ அல்லது 6 மாதங்களோ தாருங்கள் என்று தெரிவித்தே உள்விவகாரத் திணைக்களத்தால் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன.

3. இவ்வாறு விசா வராமல் இருப்பவர்களுக்கு நீங்கள் என்ன மாதிரியான ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?

6 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர் ஆயின், நீங்கள் உள்விவகாரத் திணைக்களத்திற்கு உங்களுடைய குறிப்பிட்ட சட்டவாளர்கள் மூலம் கடிதங்கள் போடலாம்.

உள்விவகார அமைச்சின் தற்போதைய Service Standard 6 மாதங்கள் ஆகும். அதற்கும் மேல் நிலுவையில் வைத்திருப்பது அவர்கள் கொள்கையை மீறுவதாகும். அவ்வாறு இழுத்தடிப்பது உங்களுடைய சட்டரீதியான எதிர்பார்ப்புக்கு முரணானது.

ஆகையால், நீங்கள் கடிதம் அனுப்பியிருந்தும் உள்விவகார அமைச்சு முடிவெடுக்காமல் இழுத்தடித்தால், நீங்கள் உங்கள் சட்டவாளர்கள் மூலம் Judicial Review செய்வதற்கு வழிவகைகள் உள்ளன.

மேலும், உங்கள் பிராந்திய பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொள்ளலாம். அவர் மூலம் உள்விவகாரத் திணைக்களத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு இதனை முறைப்பாடு செய்து, உள்விவகார அமைச்சை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் தனிப்பட்ட ஒருவராக பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்காமால், உங்கள் பிராந்தியத்தில் உங்களைப் போன்று பலர் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து முறைப்பாடுகள் செய்வதற்கு வழிவகைகள் உள்ளன.

Allgemein உலகச்செய்திகள்