சுவிஸ் ‘சன்னா’ ஆவா குழுவை இயக்கிவந்த விவரங்கள் அம்பலம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இயங்கிவந்த ஆவா குழுவை சுவிட்ஸர்லாந்து நாட்டிலிருந்தவாறே முகப் புத்தகத்தின் மூலம் சுவிஸ் ‘சன்னா’ எனப்படும் Mr.பாலப்பொடி ஜெகதீஸ்வரன் எனும் நபர் இயக்கிவந்த விவரங்கள் இப்போது வெளியாகியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவின் பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்படும் நிஷா விக்டர் உட்பட நால்வர் அண்மையில் கொழும்பில் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணைகளின்போதே இந்த விவரங்கள் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண இளைஞர்கள் மத்தியில் உள்நாட்டு யுத்தம் பற்றிய குரோத மனப்பான்மையை உருவாக்கி அவர்களை பல்வேறு குற்றச்செயல்களில்  ஈடுபடவதற்குத் தூண்டியது  சன்னா தலைமையிலான குழுவே எனவும், முகப்புத்தகத்தின் மூலமாகவே இவர்களது தொடர்பாடல்களும் நடந்து வந்திருக்கின்றன எனவும், இவர்களது நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவும், பாதாள உலகக் கும்பலை ஒடுக்கும் பிரிவும், பொலிஸ் உளவுப் பிரிவும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன எனவும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 6ஆம், 7ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கைதுசெய்த நிஷா விக்டர் உட்பட்ட ஆவா குழுவின் 6 உறுப்பினர்களும் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Allgemein