‘அமெரிக்க தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம்’ வடகொரியா மிரட்டல்

அமெரிக்காவின் குவாம் தீவு மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அவ்வப்போது அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

கடந்த மாத இறுதியில் அந்த நாடு அமெரிக்காவின் மையப்பகுதி நகரங்களையும் தாக்கும் வல்லமை பெற்ற ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் எரிச்சல் அடைந்தார். இதுபற்றி நியூஜெர்சி நகரில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இனியும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்தால் இதுவரை இந்த உலகம் காணாத அழிவை வடகொரியா சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறார்.

பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் 210 சதுர மைல் பரப்பளவு கொண்ட அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் என்னும் குட்டித் தீவு உள்ளது. இங்குள்ள விமானப் படைதளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 6 ஆயிரம் பேர் உள்ளனர்.

இந்த தீவை குறிவைத்து தாக்குவதற்கு வடகொரியா திட்டமிட்டு வருகிறது.

இதுபற்றி வடகொரியா ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “குவாம் தீவு பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்துவது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் ஆலோசித்து வருகிறோம். இதற்காக நடுத்தர அல்லது நீண்ட தூரம் சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன ஏவுகணை பயன்படுத்தப்படும். நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் இதுபற்றிய முடிவை எடுத்தவுடன் தாக்குதல் நடத்துவோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குவாம் கவர்னர் எட்டி கால்வோ கூறும்போது, “குவாம் அமெரிக்க மண். வடகொரியாவின் எந்த தாக்குதலையும் முறியடிக்கும் திறன் எங்களிடம் உண்டு. அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

Allgemein உலகச்செய்திகள்