புலிகளுக்கு தனி நாடு வழங்க போகும் மேற்குலக நாடுகள் – விமல் வீரவன்ஸ

நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ள விமல்,

புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புச் சபையிலிருந்து எமது கட்சிகளின் ஐந்து உறுப்பினர்களும் விலகிவிட்டோம். அதேபோல் வழிநடத்தல் குழுவிலும் நாம் உறுப்பினர்களாக இல்லை.

ப குழுக்களிலும் எமது உறுப்பினர்கள் இல்லை. சர்வதேச சக்திகளின் தேவையை நிறைவேற்றும் நோக்கில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளதால் நாம் இதிலிருந்து விலகிக்கொண்டோம்.

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்த வழிநடத்தல் குழு இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தாலும் இதற்கு வெளியிலிருந்து திருட்டுத்தனமாகத் தயாரிக்கப்படும் அறிக்கையே புதிய அரசமைப்பாக மாறும். அதுதான் சர்வதேச சக்திகளால் தயாரிக்கப்படும் அரசமைப்பு.

உண்மையில் இந்த நாட்டு மக்களின் தேவைக்காக அரசமைப்பு தயாரிக்கப்படமாட்டாது. நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான்.

ஜெனிவா பிரேரணையும் இதை வலியுறுத்துகின்றது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளும் இதை வலியுறுத்துகின்றன.

மேற்கு நாடுகள் இந்த நாட்டுக்கு இப்போது எத்தனை உதவிகளைச் செய்தாலும் அவற்றின் ஒவ்வொன்றினதும் நோக்கம் நாட்டை இரண்டாகப் பிரிக்கும் அரசமைப்பைக் கொண்டுவருவதுதான்.

இந்த அரசமைப்பை பௌத்த பீடங்களும் எதிர்க்கின்றன. யோசனைகள் பலவற்றை முன்வைத்துள்ளன. பௌத்த பீடங்களின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட்டால் இலட்சக்கணக்கான மக்களின் போராட்டத்தின் ஊடாக அது தோற்கடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.