இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு : சர்வதேசத்தில் கிடைத்த பரிசு

இலங்கை மாணவரின் புதிய கண்டுபிடிப்பால் சர்வதேச கண்காட்சியில் கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

வாழைச்சேனை – அந்நூர் தேசிய பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம்.யூனூஸ் கான் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரம் ஒன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

குறித்த இயந்திரம் மூலம் மேற்கூறிய செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, தன்னியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமம்மின்றி இயக்கும் திறனைக் கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

 

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற இருபத்தியொரு மாணவர்களுள் இவரும் ஒருவர்.

குறித்த மாணவன் தென் கொரியாவில் ஒரு வாரம் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) தென் கொரியா நாட்டுக்கு பயணமாகவுள்ளார்.

 

குறித்த இயந்திரம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வருமிடத்து விவசாயச் செய்கையில் பாரிய மாற்றத்தைக் கொண்டு வருதோடு, பணச் செலவீனத்தையும் குறைக்கும் என்பது நிச்சயம்.

அதே நேரம், விவசாயத்தை நம்பியிருக்கும் எமது நாட்டு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக குறித்த இயந்திரம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இந்த சர்வதேசக் கண்காட்சியில் பங்கு பற்றி கற்ற பாடசாலைக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இளவயதில் சாதனையினை நிலை நாட்டிய மாணவனுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர் ஆகியோர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Allgemein தாயகச்செய்திகள்