டென்மார்கில் தமிழீழம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், டென்மார்க் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். டென்மார்க் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள இணையத் தளத்தில் வீசா விண்ணம் செய்யும் நாடுகளின் வரிசையில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இணைய தளத்தில் வீசா விண்ணப்பம் செய்யும் நபரின் நாடு பற்றியே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காது மௌனம் காத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுயாதீனமான நாடு ஒன்றை அமைப்பதற்கு பௌதீக நிலப்பரப்பினை பார்க்கிலும், சர்வதேசத்தின் அங்கீகாரம் மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலத்திரனியல் கருத்துக் கணிப்பில் தமிழ் ஈழம் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.