கருப்பு ஜூலை நினைவுகள்

1983-07 25/27

இலங்கை தமிழர் போராட்டத்தின் ஒரு திருப்பு முனையாக பல திருப்பங்களை ஏற்படுத்திய வெலிக்கடை சிறைப்படுகொலை 30 வருடங்களை கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றுவரை தமிழர்களின் உணர்வுகளில் கலந்துவிட்ட ஒரு வரலாற்று நிகழ்வாகும். இரத்தம் சிந்தி சித்திரவதைப்பட்டு உயிர் நீத்த அந்த தியாகிகளை மீண்டும் மீண்டும் நினைத்துப்பார்ப்பதும் கூட நாம் அவர்களுக்கு செய்யும் அஞ்சலியாமாகும்.

அடுத்தடுத்து இரு நாட்கள் நடந்த படுகொலைகள் உலகையே அதிர வைத்தது. வெலிகடை சிறைச்சாலை காட்டு மிராண்டிகளின் கூடாரமாக மாறி கோரத்தாண்டவம் ஆடியது. 1983 யூலை 25, 27 திகதிகளில் இப்படுகொலைகள் எப்படி நடத்தி முடிக்கப்பட்டது என்பதை இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்வதற்காகவும். அறிந்தவர்கள் மீண்டும் அதை நினைத்துப் பார்ப்பதற்கும் இந்த இரத்த வரலாறு ஒரு சாட்சியாக வழிகாட்டும்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையின் பூட்டப்பட்ட அறைகளில் தமிழ் இளைஞர்கள் கோழைத்தனமாக கொலை செய்யப்பட்டது நாகரீக உலகையே வெட்கித் தலை குனியச் செய்தது. சிங்கள மக்களின் எல்லா மட்டங்களிலும் தமிழர் விரோத உணர்வு ஊட்டப்பட்டிருந்ததால் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் சிங்கள இனவெறி தமிழர்களை வேரறுத்தது. வெலிக்கடை படுகொலையானது தமிழ் மக்களின் தாயகத்திற்கான போராட்டத்திற்கு உலகெங்கும் ஆதரவைப் பெற்றுத் தந்ததோடு – தமிழ் நாடு தமிழ் இயக்கங்களின் தளமுமானது. அத்துடன் தமிழ் இளைஞர்களின் மத்தியில் புதிய உத்வேகத்தையும் கொடுத்தது.

வெலிக்கடை சிறைசாலையிருந்த சிங்களக் கைதிகள் சுயமாக ஏற்பட்ட உணர்ச்சி வெடிப்பு காரணமாக தமிழ் கைதிகளை கொலை செய்து விட்டார்கள் என்று சிறிலங்கா அரசு சப்பைக்கட்டு கட்டினாலும் அது தோல்விலேயே முடிந்தது. அரசாங்க உயர் மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, சிறை அதிகாரிகள், சிங்களக் கைதிகள், ஆயுதப்படையினர் உதவியுடன் நிறைவேற்றப்பட்ட திட்டமாகவே கருதப்பட்டது. இது இப்படு கொலையில் இருந்து தப்பிய தமிழ் இளைஞர்களின் கருத்தாகவும் பிரதிபலித்தது.

பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை மிகவும் பிரமாண்டமானது. அங்கே பல சிறைக்கூடங்கள் இருந்தாலும் சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டு இரண்டு மாடிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ள சப்பல் (CHAPEL) கட்டிடம். தமிழர்களின் இரத்த சாட்சியாக இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. சப்பல் என்றால் கத்தோலிக்க ஆலயம் என்று ஒரு பொருளும் உண்டு. இங்கே தான் குட்டிமணி – தங்கதுரை, ஜெகன் உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் சிங்களக் கைதிகளால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். பனாகோட இராணுவ முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி – தங்கதுரை நீதிமன்ற தீர்ப்புக்குபின் மரணதண்டனை கைதிகளாக முதன்முதலில் வெலிகடை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகியோர் மரண தண்டனை கைதிகளாகவும், மீதமிருந்த தமிழ் இளைஞர்கள் விசாரணைக் கைதிகளாகவும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டனர்.

25.07.1983 முதல் நாள் படுகொலை
வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு வெளியே கொலை, கொள்ளை, தீவைப்பு, கற்பழிப்பு என சிங்கள இன வெறியர்கள் தமிழர்கள் மீது தாக்குதலை தொடுத்து கோரத்தாண்டவம் ஆடிய வேளையில் சிறைச் சாலைக்கு உள்ளேயும் கொலை வெறித் தாக்குதல் தொடங்கியது. நேரம் பிற்பகல் 2.30 மணி. ஊரடங்குச் சட்டம் கொழும்பு நகரில் அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சிறை அதிகாரிகள் துரிதமாக செயல்படத் தொடங்கினர். சப்பல் (CHAPAL) கட்டிடத்தின் மேல் தள சிறைக் கூடங்களில் அடைக்கபட்டிருந்த சிங்களக் கைதிகளை சிறைக் காவலர்களே திறந்துவிட்டனர். சிறைச்சாலை சட்ட விதிகளின்படி ஒரு குண்டூசி வைத்திருப்பதற்கே அனுமதி மறுக்கும் சிறை நிர்வாகம் கைதிகள் ஆயுதங்கள் எடுப்பதற்கு எப்படி அனுமதித்தார்கள். கத்தி – கோடரி – கூர்மையான இரும்புக் கம்பிகள் – விறகுக்கட்டை – கடப்பாரை போன்றவை இந்தப் படுகொலைக்கு சிங்களக் கைதிகளால் பயன்படுத்தப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி இந்த ஆயுதங்கள் சிறை அதிகாரிகளால் கைதிகளுக்கு கொடுக்கப்பட்டு இப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. கைகளில் ஆயுதங்கள் கிடைத்ததும் வெறிக் கூச்சலுடன் தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சப்பல் (CHAPAL) சிறைக்கட்டிடதிற்குள் சென்று ஒவ்வொருவராக இழுத்து வந்து வெட்டியும் – குத்தியும் – அடித்தும் சாய்த்தனர். குட்டிமணி – தங்கத்துரை – ஜெகன் உட்பட தமிழ் கைதிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். கடமையில் இருந்த காவலர்கள் இப்படுகொலையை தடுக்க முன்வரவில்லை. பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக இறந்தவர்களின் உடல்களை சப்பல் (CHAPAL) கட்டிடத்திற்கு வெளியே இழுத்துவந்து புத்தர் சிலை அமைந்துள்ள மைதானத்தில் போட்டு சிதைத்தனர். குற்றுயிராக இருந்தவர்கள் மேலும் குதறப்பட்டு கொல்லப்பட்டனர். தங்களது மரணத்தின் பின் மலரும் தமிழ் ஈழத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக பார்வையற்ற தமிழர்கள்களுக்கு தங்கள் கண்களை தானம் செய்திருந்த குட்டிமணி – தங்கத்துரை இருவரின் கண்களை தோண்டி எடுத்து காலில் போட்டு மிதித்து சிதைத்தனர். இதை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள கைதிகள் ‚ஜெயவேவா‘ (வெற்றி) என்று கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தனர். சப்பல் (CHAPAL) கட்டிடத்தின் B 3 பிரிவிலிருந்த குட்டிமணி – தங்கதுரை ஜெகன் நடேசதாசன் – சிவபாதம் மாஸ்டர் – தேவன் ஆகிய அறுவரும், D 3 பிரிவிலிருந்த 29 தமிழ் கைதிகளும் படுகொலை செய்யப்பட்டனர். நேரம் போதாததால் மீதமிருந்த தமிழ் கைதிகள் முதல் நாள் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தனர். சூரிய அஸ்தமனத்தின் அடையாளமாக காரிருள் சூழ அமைதியாக கடந்து சென்ற அந்த நேரத்தில் அத்தனை தமிழ்க் கைதிகளின் மூச்சும் நின்று போனது. சிறைச்சாலைக்கு விறகுகள் ஏற்றி வரும் லொறியில் மரணித்த தமிழ் கைதிகளின் உடல்கள் அடுக்கப்பட்டு கனத்தை சுடுகாட்டு மைதானதுக்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிறைச்சாலைக்கு உயிரோடு வந்தவர்கள் உயிரிழந்து விடை பெற்றுச் சென்றது. கல்நெஞ்சத்தையும் கலங்கவைக்கும் துயர சம்பவமாக அமைந்தது.
27.07.1983 இரண்டாவது படுகொலை
முதல்நாள் படுகொலைகள் முடிந்து மறுநாள் 26.07.1983 அன்று மாலை கண்துடைப்பு. விசாரணை ஒன்று நடத்தப்பட்டது. நீதிபதி – அரசு உயர் அதிகாரிகள் – போலிஸ் அதிகாரிகள் என ஒரு குழுவினர் வந்திருந்தனர். கொலைக் களத்தை சென்று பார்வையிட்டனர்.

சப்பல் (CHAPAL) கட்டிடத்தின் கொலை நடந்த இடம் சுத்தமாக கழுவப்பட்டிருந்தது. அப்படி ஒரு படுகொலை சம்பவம் நடந்த இடமாகவே தெரியவில்லை. அவ்வளவு சுத்தம். மிகுதியிருந்த தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்ட நீதிபதி, இனி மேல் நேற்று நடந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்காது என்று உறுதிமொழி அளித்துவிட்டு சென்றார்.

தங்களை வெலிக்கடையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுப்படி தமிழ் கைதிகளால் விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

வேறு சிறைச்சாலைக்கு மாற்றம் கேட்ட தமிழ் கைதிகள் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். சப்பல் (CHAPAL) கட்டிடத்திற்கு பக்கத்திலிருந்த Y.O கட்டிடத்திற்கு (YOUTH OFFENDERS) மாற்றப்பட்டார்கள். இது ஒரு மாடியைக் கொண்ட சிறிய கட்டிடம். புத்தர் சிலைக்கு பின்னால் அமைந்திருந்தது.

திட்டமிட்டபடி இரண்டாம் நாள் படுகொலைக்கான நேரம் குறிக்கப்பட்டது. அதற்கும் ஊரடங்கு சட்டம் பிறபிக்கப்பட்ட நேரம் சிறை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொழும்பு நகரில் பிற்பகல் 4 மணிக்கு ஊர் அடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது சிறைச்சாலை உள்ளே சிங்கள சிறைக் கைதிகள் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது என்பதில் அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்வதைக் காரணம் காட்டி சிங்களக் கைதிகள் வெளியே தப்பிச் செல்லலாம் என்பதால்தான் சிறை அதிகாரிகள் ஊரடங்கு சட்டம் அமுலான நேரத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். மீறித் தப்பிச் சென்றாலும் வெளியே காவலுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இராணுவம் அவர்களை சுட்டுக் கொல்லும். எது எப்படியோ ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைப் போல தமிழ் கைதிகள் கொல்லப்படவும் வேண்டும், சிங்கள கைதிகள் தப்பிச் செல்வது தடுக்கப்படவும் வேண்டும்.

சிங்களக் கைதிகளை வெறியேற்றுவதற்கு சிறை அதிகாரிகளால் பொய்யான வதந்தி ஒன்றும் பரப்பப்பட்டது. யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த சிங்கள சிறை அதிகாரிகளும், சிங்களக் கைதிகளும் தமிழ் கைதிகளால் கொல்லப்பட்டுவிட்டனர் என்று எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றி தூண்டிவிட்டனர். அவ்வளவுதான், வெலிக்கடை சிறையில் மீண்டும் இரத்த ஆறு ஓடியது. Y.O சிறை கட்டிடத்தில் அடைந்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் பாதிக்குமேல் வெட்டப்பட்டும் – குத்தப்பட்டும் படு கொலை செய்யப்பட்டனர். முதல் படுகொலை போல் இரண்டாவது படுகொலையை முழுமையாக சிறை அதிகாரிகளால் நடத்தி முடிக்க முடியவில்லை காரணம், தமிழ்க்கைதிகளின் எதிர்தாக்குதல் சிங்களக் கைதிகளை பின் வாங்கச் செய்தது. மதிய உணவுக்கு கொடுக்கப்பட்ட காரக் குழம்பு, சாப்பிடும் அலுமினியத் தட்டு, தண்ணீர் எடுப்பதற்கு பயன்படும் சிறிய வாளி, பெட்ஷீட் முதலியவை தமிழ் கைதிகளின் ஆயுதம் ஆனது.

நீண்ட நேரம் இதைவைத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலும் தனிமைப்பட்டு போகாமல் கூட்டமாகக் கூடி குழுவாக நின்று சிங்களக் கைதிகளை தாக்கினர். இரத்தக் காயங்களுடன் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. உயிர் போகும் இந்த கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் சிறைச்சாலையின் முன் கதவை தட்டியது. விசேஷ இராணுவப் படை பிரிவு ஒன்று சிறைச்சாலைக்குள் நுழைந்து கண்ணீர் புகை வீசி சிங்களக் கைதிகளை விரட்டி கலைத்தது. அதே வேகத்தில் Y.O சிறைக் கட்டிடத்திற்குள் சென்ற இராணுவம் படுகொலையிலிருந்து காயத்துடன் தப்பிய தமிழ் கைதிகளை மீட்டுச் சென்றது. இரண்டாம் நாள் படுகொலையில் 19 தமிழ் கைதிகள் காப்பாற்றப்பட்டும் 18 தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்பட்டும் இந்த கோரத் தாண்டவம் முடிவுக்கு வந்தது.

1983 ஆம் ஆண்டு ஜெயவர்தனே ஆட்சியில் வெலிக்கடை சிறைப்படுகொலை மூலம் முன்னுரை எழுதப்பட்டது. 2009ம் ஆண்டு ராஜபக்சே ஆட்சியில் முள்ளிவாய்க்கால் படுகொலை மூலம் முடிவுரை எழுதப்பட்டது. ஆட்சி மாறினாலும் ஆட்சியாளர்களின் மனநிலை மாறவில்லை. ஜெயவர்தனேவும் ராஜபக்சேவும் தமிழர்களை கொல்வதில் தங்களுக்குள்ளேயே போட்டியாளர்களாக மாறியிருந்தார்கள். படுகொலை செய்யப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான தமிழர்களின் புதைக் குழிகளுக்கும் சொந்தகார்கள் இவர்கள்தான். அதிலும் முள்ளிவாய்க்கால் புதைக்குழியின் சொந்தகாரர் ராஜபக்சே என்றால் அது மிகையாகாது. எது எப்படியோ! ஒன்றுமட்டும் உண்மை. ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தமிழர்கள் கொடுத்த விலைதான் அதிகம்.

 

Allgemein