முல்லைத்தீவு மாவட்டத்தின் இனப்பரம்பலைச் சீர்குலைக் கும் நோக்கத்துடன் குடியேற் றங்களை ஏற்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் இடம்பெற்று வருவகின்றன என்று அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில் அமைச்சர் ஒருவரே உள்ளார் என்றும் தெரிய வருகின்றது.
வட மாகாணத்தைப் பொறுத்தவரையில், பிற இனத்தவர்கள் குடியேற்றப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களாகவே காணப்படுகின்றனர். இதில் முல்லைத்தீவு மாவட்டமே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்துடனான எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுவிட்டுள்ளன.
மணலாறு என்ற பாரம்பரிய தமிழ்ப்பிரதேசம் சிங்களக் குடியேற்றங்களால் வெலி ஓயாவெனச் சிங்களத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவ்வாறே அழைக்கப்பட்டும் வருகின்றது. இதனால் முல்லைத்தீவு மாவட்டதினூடாகத் திருகோணமலைக்குப் பாதுகாப்பான பயணத்தைத் தமிழர்கள் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதைவிட அடாத்தான வகையில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டுக் குடி யேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதோடு, பௌத்த விகாரைகளும் வகை தொகையின்றி அமைக்கப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் இந்த இடங்களில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளே இல்லாமற் போய்விடும் என்பதைக் கூறத்தேவையில்லை.
கேட்டுக் கேள்வியின்றி அழிக்கப்படும் காடுகள்
இந்த நிலையில்தான், முல்லைத்தீவு மாவட்டத்தில், பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம் மக்களைக் குடியேற்றுகின்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகின்றது. போர் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பெருமளவு காடுகள் ஏற்கனவே அழிந்து போய்விட்டன.
போர் ஓய்ந்த பின்னரும் காடு களைப் பெருமளவில் அழிக்கின்ற நடவடிக்கைகள் இடம்பெற்றன. பெருமளவு காட்டு மரங்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களின் ஒத்துழைப்புடன் தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் உள்ளூர் மக்கள் தமது வீட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மரங்கள் கிடைக்காது அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காடுகளிலிருந்து சிறிய தடிகளைக் கூட வெட்டி எடுத்து வருவதற்கு இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது பெருமளவு காடுகளை அழித்து குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படவிருப்பதால் ஏற்படப் போகின்ற எதிர்விளைவுகள் மிகவும் ஆபத்தானவை.
ஏற்கனவே முல்லைத்தீவு உட்பட வடக்கு மாவட்டங்கள் கடுமையான வறட்சியில் சிக்கித் தவிக்கின்றன. மழை வீழ்ச்சி குறைவாக இருப்பதே இதற்கான காரணமாகும். மழையை ஊக்குவிக்கும் காரணிகளில் பசுமை பிரதான பங்கை வகிக்கின்றது. மேலும் மேலும் மரங்கள் அழிக்கப்படும்போது மழைவீழ்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டு நீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும். யாழ்ப்பாணம் பாலைவனமாக மாறிவிடுமென எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில், வடக்கின் ஏனைய மாவட்டங்களும் இதே நிலைக்கு மாறிவிடாதென்பதை மறுக்கமுடியாது.
திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆபத்தை ஏற்படுத்துபவை
இதைவிடத் திட்டமிட்ட குடியேற்றங் கள் மிகவும் ஆபத்தானவை. இதனால் அந்தப் பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்களே பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். இது இலங்கைக்கு மட்டுமல்லாது வேறு நாடுகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறானதொரு நிலையில்தான் கிழக்கு மாகாணம் தமிழர்களின் கைகளிலிருந்து பறிபோனது. வடக்குக்கும் அவ்வாறானதொரு அவலநிலை ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிப்பதாகத் தோன்றவில்லை.
வடக்கைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபையொன்று இயங்கி வருகின்றது. காணி தொடர்பான அதிகாரங்களைக் கொண்ட அமைச்சு முதலமைச்சர் வசமே உள்ளது. ஆனால் காணியதிகாரங்கள் வழங்கப்படவில்லையெனக் கூறிவிட்டு ஒதுங்கி நிற்கவே அவரால் முடிகின்றது. ஆனால் கண் முன்னே அநீதி இடம்பெறுவதைப் பார்த்துக் கொண்டு மாகாண சபை வாளாவிருக்க முடியாது. தம்மால் இயன்றவரை அதைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகளையா வது செய்தல் வேண்டும்.
மாகாண சபையின் சார்பில் அகிம்சைப் போராட்டங்களை நடத்தலாம்.
மக்களை ஒன்று திரட்டி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அநியாயங்களை உலகுக்கு எடுத்துக் கூறலாம். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்.
தவறான செயல்கள் இடம்பெற்றால் உடனேயே தடுத்து நிறுத்த வேண்டும். இதைவிடுத்து இவர்கள் எதையுமே செய்யாது வாளாவிருந்தால் அது தமிழ் மக்களுக்கு இவர்கள் செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகவே கருதப்படும்.
அரச உயர் அதிகாரிகள் அழுத்தங்களுக்கு இடம்கொடுக்காது செயற்பட வேண்டும்
முல்லைத்தீவிலுள்ள அரச உயர் அதிகாரிகள் எவரது அழுத்தங்களுக்கும் இடம்கொடாது தமது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். எவரது அழுத்தங்களுக்கும் இடம்கொடாது இவர்கள் செயற்படும் போதுதான் தமிழ் மக்களைப் பாதிப்பிலிருந்து இவர்களால் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் சிலரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல.
முல்லைத்தீவின் சிங்களக் குடியேற்றத்திட்டங்கள் மகிந்த ராஜபக்ச காலத்திலேயே திட்டமிடப்பட் டன என்று கூறப்படுகின்றது. இதைத் தற்போதைய கூட்டாட்சி அரசும் அனுமதிக்க முடியாது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் ஓர் இனத்தைப் பாதிக்கக்கூடிய வகையில் செயற்பட்டால், அது எதிர்காலத்தில் அவர்களுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுமென்பதை நாம் ஏற்கனவே அனுபவபூர்வமாகக் கண்டறிந்துள்ளோம்.
இது திரும்பவும் தேவை தானா என்பதையும் சம்பந்தப்பட்ட அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.