இராணுவத்தின் பாதுகாப்பை ஒருபோதும் பெறமாட்டேன்: சீ.வி. விக்னேஸ்வரன்

வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் எனக் கோரும் நான், இராணுவத்தின் பாதுகாப்பை ஒருபோதும் பெற மாட்டேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு முதலமைச்சர் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.

இதன் பின்னர் அங்கு வருகை தந்திருந்த ஜெனசத பெரமுன பொதுச் செயலாளர் பத்திரமுல்ல சீலரட்ண தேரர் முதலமைச்சரை சந்தித்து வடக்கின் நிலமைகள் குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தார்.

முதலமைச்சரிடம் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்ட தேரர், வடக்கில் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் இளைஞர்களிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, முதலமைச்சருக்கும் இளைஞர் குழுக்களால் உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறியதுடன் பொலிஸாரை விட இராணுவத்தின் பாதுகாப்பே பொருத்தமானது எனவும் இராணுவத்தின் பாதுகாப்பை பெறுமாறும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என நான் கூறி வருகின்றேன்.

அப்படியிருக்கையில், நான் எப்படி இராணுவத்தின் பாதுகாப்பை கோருவேன்? எனக்கு பொலிஸாரின் பாதுகாப்பே போதுமானது எனத் தெரிவித்தார்.

நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது பொலிஸ் சார்ஜன்டை சுட்டவர் தன்னுடன் ஆயுதத்தை கொண்டு வரவில்லை.

அவர் அந்த பொலிஸ் சார்ஜன்டின் இடுப்பு பட்டியில் இருந்த துப்பாக்கியை பறித்தே அவரைச் சுட்டுள்ளார்.

அத்துடன், வடக்கில் தற்போது இளைஞர்களிடம் ஆயுதம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே அவை களையப்பட்டு விட்டன.

தற்போது படையினர் மற்றும் பொலிஸாரிடமே ஆயுதங்கள் உள்ளன. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவர்களது கடமையாகும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Allgemein