நீ இருந்திருந்தால்… கவிதைகவிமகன்.இ

நீ இருந்திருந்தால்
குயிலிசையாய்
உன் குரல் பல நூறு
முறை அண்ணா
அழைக்க கேட்டிருப்பேன்

காயும் கறியுமாய் நீ
தினம் சோற்றோடு தரும்
பாசத்தையுமல்லவா
உணவாக்கி உன்
உண்டு வாழ்ந்திருப்பேன்

பசி மறந்து முகம்
மலர உன் புன்னகை
பூக்கள் தினமும்
என் மடியில் சிந்துவதை
ரசித்திருப்பேன்

மச்சமுள்ள உன்
கழுத்தருகே தோழனாய்
என் மச்சான்
மங்கள மாங்கல்யத்தோடு
வருவதை பார்த்திருப்பேன்

மாதங்கள் கடந்து
வருடங்கள் ஆனா போது
மாமா என்றழைக்க
உன் மடி தவழும் என்
குல வதுவை கண்டிருப்பேன்

தாடி முடி குத்த
நான் குடுத்த முத்தமதை
ஏற்க மறுத்தழும்
மருமகள் வதனம்
கண்டு சிரித்திருப்பேன்

ஆண்டுகள் கழிய
மஞ்சளோடு நீரினை
மொண்டு ஊற்றி அவள்
மங்கள செய்தியை
கொண்டாடி மகிழ்ந்திருப்பேன்

என்ன செய்ய தங்கையே
என் பின் பிறந்தவளே
கண்ணில் நீர் தந்து
சென்று விட்டாய்
என்னை விட்டு…

அன்றே நான் அறிவேன்
கன்னம் சிவந்து
உதட்டு மையும்
நகத்து பூச்சும்
உனக்கு பிடிப்பற்றவை

முகத்தில் கரியும்
கையில் கருவியும்
விழிக்கு தொலை காட்டியும்
கழுத்தில் நஞ்சும்
உனக்கு பிடிப்புள்ளவை

உன் தோழிகள்
கணவனுக்காய் கனவு காண
விழிதிறந்து அனல்
மழைக்காய் பாதை
பார்க்கும் வேவை நினைப்பாய்

உன் அக்காக்கள்
கையில் புத்தகத்துக்காய்
சண்டையிட
செருப்பில்லா வெற்று
காலோடு நீ நடந்தாய்

அம்மாவை கூட நீ
நினைக்கவில்லை
அடுத்தவன் காலில்
என் தாய் மண் என்பதை
மட்டுமே நீ நினைத்தாய்

தங்கையே…!அடிக்கொரு
முறை தலைவனை
உச்சரித்த உன் உதட்டில்
நான் அண்ணனாக
வந்தது பெருமை

விழியில் நீர் இல்லை
உன்னை காண
வழியும் இல்லை
குழியிலிட்டு மூடி விட்டேன்
வலியில் துடித்து அழுகிறேன்

கவிமகன்.இ

Allgemein கவிதைகள்