முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் முல்லைத் தீவுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வரக் கூடாது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் செய்தியாளர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 19ஆம் திகதி, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு வரக் கூடாது எனவும், அவர் வந்தால் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு வெளியிடப்படும் எனவும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங் கம், மே மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்தச் செய்தி கொழும்புத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்தச் செய்தியை தொலைக்காட்சிக்கு வழங்கினார் என்று கூறப்படும் யாழ்ப்பாணப் பிராந்திய செய்தியாளரை விசாரணைக்கு வருமாறு கொழும்புக்கு அழைத்திருந்தனர்.
தனது உடல்நிலை காரணமாக கொழும்புக்கு வரமுடியாது என்று செய்தியாளர் தெரிவித்திருந்த நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்தியாளரை நேற்று வருமாறு அழைத்திருந்தனர்.
நேற்றுக் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை விசாரணை நடத்தினர். செய்தியாளர் வழங்கிய வாக்குமூலம் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்பட்டது.