வவுனியாவில் திடீரென ஒன்று கூடிய மாணவர்கள்

வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்னால் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்து தனது ஆசிரியர் விடுத்திக்கு திரும்பிச் சென்ற ஆசிரியரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் அவரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ரஞ்சித் கண்ணா (வயது- 29) என்ற யாழைச் சோந்த ஆசிரியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்குதலாளிகளை பொலிசார் உடனடியாக கைது செய்யக் கோரியுமே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‚ ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய், காவல்துறையே குற்றவாளிகளை கைது செய்‘ உன எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் தாக்குதல் நடத்திய நபர்கள் மூன்று தினங்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Merken