சம்பந்தன் உண்மையைக் கூறவேண்டும் மகாநாயக்க தேரர்களிடம் – மனோகணேசன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உண்மையைக் கூறவேண்டுமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன்தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என வெளியாகிய செய்தியை அடுத்தே அமைச்சர்மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றது முதல் இரண்டு செய்திகளை சிங்கள தேசத்திற்குச் சொல்லியுள்ளார்.

ஒன்று நாம் இலங்கை என்னும் ‘ஒரே நாடு’ என்ற வரையறைக்குள் வந்து விட்டோம் என்ற செய்தி.

அடுத்தது, எதிர்க்கட்சி தலைவர் திரு. அமிர்தலிங்கம், ஆயுத பாதைக்கு இடம் கொடுத்து அன்று பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பின், இன்று மீண்டும் திரு. சம்பந்தன் அப்பதவியை பெற்றதன் மூலம் வடகிழக்கில் தமிழர், அதிகாரப்பூர்வமாக பாராளுமன்ற பாதைக்கு திரும்பியுள்ளனர் என்ற செய்தி.

ஆகவே, ‘இந்த தீவில் தனியொரு தமிழ் நாட்டை உருவாக்கும் கொள்கையையும், ஆயுதப்போரையும் கைவிட்டு இவ்வளவு தூரம் நாம் இறங்கி வந்திருக்கின்றோம். அதற்கு பதிலாக நீங்கள் எங்களுக்கு என்ன தரப்போகின்றீர்கள்’ என, மகாநாயக்கர்களின் முகங்களுக்கு நேரே, அன்றே கேள்வி எழுப்பி இருக்க வேண்டும்.

இந்த காத்திரமான நல்ல செய்திகள், சிங்கள மக்களுக்கு நன்றாக காதில் ஏறும் விதமாக காத்திரமாக சொல்லப்பட வேண்டுமென நான் விரும்பினேன். அதனால்தான் ‘அப்போதே’ செல்லுங்கள் என்று சொன்னேன். இதுதொடர்பில், ‘நீங்கள் விரும்பும் ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளேன்’ என்றும் கூறினேன். தம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை எதிர்க்கட்சி தலைவர் அறிய வேண்டும் எனவும் விரும்பினேன்.

ஏனெனில் இந்த பதவியை ஏற்றுக்கொண்டமைக்காக, திரு. சம்பந்தன், தீவிர தமிழ் தரப்பினால் விமர்சிக்கப்படுகிறார். தீவிர சிங்கள தரப்பினாலும் திட்டி தீர்க்கப்படுகிறார். இதற்கு மத்தியில்தான் அவர் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் ஒரு தீர்வை நோக்கி கடுமையாக போராடுகிறார். ஆகவே அத்துணை விலை கொடுத்து பெற்ற அந்த எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்த்து தருகின்ற முற்போக்கு செய்திகளை காத்திரமாக தாமதமில்லாமல் இருபது மாதங்களுக்கு முன்பே பயன்படுத்தி இருக்க வேண்டும்.

ஏனெனில் அப்போது இந்த அரசியலமைப்பு என்ற கோஷம் முழுமையாக அரங்குக்கு வந்திருக்கவில்லை. இன்று, வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறைமை, மத சார்பின்மை போன்ற தலைப்புகளை அரங்குக்கு கொண்டுவந்து, மகிந்த ராஜபக்ஸ அணி, மகாநாயக்கர்களை சூடேற்றி வைத்துள்ளது. தங்களுக்கு உரிய எதிர்கட்சி தலைவர் பதவியை திரு. சம்பந்தன் பறித்து கொண்டதை போன்ற சித்திரத்தை நாட்டில் இவர்கள் தீட்டி வருகிறார்கள்.

இந்த தலைப்புகள் பற்றிய எனது தனிப்பட்ட அடிப்படை நிலைப்பாடுகளை இந்நாட்டு தமிழர்கள் அறிவார்கள். திரு. சம்பந்தனின் அடிப்படை நிலைப்பாடுகளையும் நாடறியும். ஆனால், திரு. சம்பந்தனும், நானும் இடம்பெறும் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவின் உள்ளே நிலவும் யதார்த்தம், இந்த விடயங்களை நிராகரிக்கின்றன. இதைதான் நான் உரக்க பேசுகிறேன். ஏனெனில் தமிழ் மக்களிடம் உண்மையை எடுத்து கூறி அவர்களை தயார் செய்திட வேண்டும். நான் உண்மையை உரக்க பேசுவதில், எவருக்கும் அதிருப்தி ஏற்படுமானால் அதுபற்றி எனக்கு எதுவும் செய்வதிற்கில்லை. அது எனது பிரச்சினை அல்ல.

ஆகவே இன்று தாமதித்தாவது, த.தே.கூட்டமைப்பு மகாநாயக்கர்களை சந்தித்து உண்மைகளை பேசுவது நல்லதே. அதுபோல், இதுதான் இங்கே இன்று நிலவும் யதார்த்தம், என்ற உண்மையை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும் திரு. சம்பந்தன் எடுத்து கூறவேண்டும். மக்கள் புரிந்துக்கொள்வார்கள். ஏனெனில், ஒரு தரப்பு மகாநாயக்கர்கள் என்றால், அடுத்த தரப்பு (வடகிழக்கு) தமிழ் மக்கள்.