இன்று உன் நினைவுநாள். ரஞ்சன்லாலா

நீ இனி எம்முடன் இல்லை என்று மிகமிக உறுதியாக தெரிந்த நாள். உன் வீரமரணம் அறிவிக்கப்படுகிறது.(13.07.1984)
அந்த நேரத்தில் அமைப்பில் உயரிய பொறுப்பான கப்டனாக நீ அறிவிக்கப்படுகிறாய்.உனக்கான வீரவணக்க சுவரொட்டிகள் தாயகம் எங்கும் வீதிகளில் எழுகின்றன. மக்கள் தாமாகவே சில இடங்களில் உனக்கான படங்களை ஒட்டுகிறார்கள்.

ஆனாலும் ஒரு மனிதனுக்கு இது எதுவுமே உன் ஆளுமையை, அயராத உன் வீரத்தை, விடுதலைவயின்மீதான உறுதியை வெளிக்காட்ட போதுமான வெளிப்பாடாக தோன்றவில்லை.

உன்னை பற்றி மிக ஆழமாக தெரிந்தவர் தலைவர். உன்னை பற்றிய விபரங்கள் உன்னுடைய வீரமரணசேதியில் எழுதப்படும்போது தலைவரே உனக்கானஒரு உன்னுடைய ஆளுமையை சொல்லும் வார்த்தையை சேர்க்கிறார்.
“”சிறீலங்கா ராணுவத்தின்மீது விடுதலைப்புலிகள் நடாத்திய முதலாவது தாக்குதலில்இருந்து சகல தாக்குதல்களிலும் பங்கேற்ற புரட்சிகர போராளி ரஞ்சனலாலா “” என்பதே தலைவர் உனக்காக சேர்த்த அந்த வசனம்.
நீ எத்தகைய பொறுப்புகளை இந்த அமைப்பில்கொண்டிருந்தாய் என்பதை , நீ இந்த விடுதலைப்போராட்டத்தில் எப்படியான பங்கு கொண்டிருந்தாய் என்பதற்கு உன்னை பற்றிய தலைவரின் வார்த்தையே சான்று.

லாலா உன்னை அதற்கு முன்னமேயே பார்த்து இருந்தாலும் எமது அமைப்பின் உறுப்பினனாக கண்டது 1979 காலத்திலேயே.
அதுவரை உன்னுடன் தொடர்புகளை பேணிவந்த மாத்தையா உன்னை உறுப்பினனாக எமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
நீஅமைப்புக்கு வந்த பொழுதில் அமைப்பு மிக முக்கியமானஒரு பிரச்சனையுள் நிற்கிறது.

வெறுமனே எழுதி கொண்டும் கார்ல்மார்க்ஸ் லெனின்மாவோ என்று கிறுக்கி கொண்டும் இருந்தால் விடுதலை தானாக வந்துவிடும் என்ற சோம்பேறி தத்துவத்துக்கும் விடுதலை என்பது தொடர்ச்சியான செயற்பாடு, இடையறாத மக்கள்வேலை என்று செயலை முன்வைத்த தலைவரின் கோட்பாட்டுக்குமான முரண்பாடாக அமைப்பு உடைகிறது.

அந்த நேரத்தில் தலைவருடன் நீயும் நின்றாய் உறுதியாக- தலைவருக்கு தோள் கொடுத்தாய் நீயும்.
1972ல் தலைவரின் கருத்தில் உதயமான புதிய தமிழ்புலிகள் 1976ல் தமிழீழவிடுதலைப்புலிகளாக எழுந்து 1979 உடைவின்போது ஏறத்தாள அது மீண்டும் பூஜ்யநிலையில் வந்து நின்ற பொழுது அது.

எம்மை ராணுவரீதியாக துடைத்தெறிய சிங்களஆயுத படைகள் முயன்ற அந்த நேரத்தில் எம்மை அரசியல் நீதியாக இல்லாமலே செய்து விட தமிழர்கூட்டணியும் மிக முயன்றது.

ஆயுதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் மீண்டும் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு எழுவதற்கு முயன்றவர்களில் நீயும் முக்கியமான ஒருத்தன் ரஞ்சன்லாலா.அந்த நாட்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாத பொழுதுகள்.

தங்கத்துரை குட்டிமணி அண்ணாக்களின் கைது க்கு பின்வந்த நாட்கள் நாம் வாழ்வதா அழிவதா என்ற நாட்கள்.
தங்கத்துரை குட்டிமணி அண்ணாக்களின் கைதுக்கு பிறகு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சிறீலங்கா ஆயுதப்படைகள் மிக வீச்சாக தமது வலையை விரித்த பொழுதுகள் அவை..

அதிகாலை பொழுதுகளும் நள்ளிரவுகளும் ஏதாவது ஒரு சுற்றிவளைப்புடனேயே ஆரம்பித்து அதில் இருந்து தப்பி ஓடும் நாட்களாகவே இருந்தன.. ரஞ்சன்லாலா அந்த பொழுதுகளில் நீ பருத்துறையில் எமக்கான ஒரு பரந்த ஆதரவுத்தளத்தை உருவாக்கினாய்.
சுற்றிவளைப்பில் இருந்து உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் அமைப்பின் உடைமைகளையும் காப்பாற்றுதில் நீ அந்த நாட்களில் இரவுபகலாக இயங்கிய ஒருத்தன்.

அந்த நாட்களில் ஒருநாள் உன்னிடம் என்றுமே இல்லாத ஒரு பெரும்கோபம் ஒன்றை ஒருநாளில் கண்டேன்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்த நாளில் யாழ்நகருக்குள் அவதானிக்கப்பட்ட ஒருவிதமான அசாதாரண நிலைமை கருத்தில் கொண்டு மாலை பொழுதில் முன்னிரவில் நாம் அனைவரும் தலைவர் உட்பட உரும்பராய் கோண்டாவில் வழியாக வல்வைவெளி தாண்டி வடமராய்ச்சிக்கு போன பின்னர் அதிகாலையில் கேள்விப்படுகின்றோம். எமது நூலகம் எரிக்கப்பட்டு விட்து என….

அதற்கு சில நாட்கள் முன்னர்தான் கிட்டுவின் (ic) போட்டோ சிங்களபடைகளிடம் பிடிபபட்டு இருந்ததால் அவரை விட்டு விட்டு நீயும் நானும் மாத்தையாவும் (சிறீ) யாழ் விரைகின்றோம். காற்றுமுழுதும் புத்தகங்கள் எரிந்த சாம்பலை காவிவந்த அந்த அருகாமையில் நின்று நூலகத்தை பார்த்து உன் கண்கள் கலங்கி இருந்தன . ஆனாலும் நீ சமாளித்தாய் கண்ணுக்குள் சாம்பல் புகுந்துவிட்டது என..
ஒருநாளும், ஒருபோதும் இனி ஓய்ந்து இருக்க கூடாது, ஓய்ந்து இருக்க முடியாது என்று நீ முடிவெடுத்த தருணம் அது.
அது முடிந்து 5 மாதத்துக்குள் நீயும் சீலனும் 15.10.81 அன்று சிங்களராணுவத்தின் மீதான தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதலை அதே யாழ்நகரில் வைத்து வெற்றிகரமாக நடாத்துகிறீர்கள்.அதன்பிறகு நீ வீரச்சாவு அடையும்வரை நடந்த எமது அமைப்பின் அனைத்து ராணுவநடவடிக்கையிலும் நீ பங்கேற்கிறாய்.
சாவச்சேரி காவல்நிலைய தாக்குதல், நெல்லியடி பொலீஸ்ஜீப் தாக்குதல், உமையாள்புரம் கவசவாகன தாக்குதல்,
பொன்னாலை கடற்படை வாகன தொடர்மீதான கண்ணி தாக்குதல், யாழ் அரச செயலகம்மீதான தாக்குதல், திண்ணைவேலி தபால்பெட்டி சந்தி தாக்குதல், நீ வீரச்சாவு அடைவதற்கு ஒருசில மாதங்கள் முன்பான யாழ் சிங்களமகா வித்தியாலம் அருகில் சிங்களபடை; வாகன தொடர்மீதான பெரும் தாக்குதல் என்று அனைத்திலும் உனது பங்களிப்பு பெரிதாகவே இருந்தது

நீ ஒருபோதும் சாமி கும்பிட்டு நான் பார்த்தது இல்லை ரஞ்சன்.ஆனாலும் திண்ணைவேலி தாக்குதலுக்கு பின்பான ஒருநாளில் நானும் நீயும் தங்கி இருந்த மந்திகை மடத்தடி வீட்டில் அதிகாலையே எழுந்து குளித்து விட்டு என்னையும் அழைத்து கொண்டு வல்லிபுர ஆழ்வார் கோவிலுக்கும் பருத்துறை சேர்ச் ஒன்றுக்கும் போனோம்.
என்ன காரணம் என்பதை அங்குதான் எனக்கு நீ சொன்னாய். நீயும் தலைவரும் திண்ணைவேலி தாக்குதலில் ஒரே வீட்டின் சுவருக்கு அருகில் நிலையெடுத்து நின்றீர்கள். .தலைவருக்கு பக்கத்தில் வீதியில் ராணுவ ட்றக் நிற்கும் வண்ணம் தற்செலாக கண்ணி வெடி வெடிக்கப்பட்டது.தலைவரின் கால்களின் அருகில் ராணுவத்தினர் வீசிய கமர் கிரேனைட் ஒன்று வீழ்ந்து நெடுநேரம் கிடந்துது என்றும் அது வெடித்திருந்தால் தலைவரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்திருக்கும் என்றும் பிறகு அறிந்திருந்தாலும் அந்த நேரத்தில் நீ கடவுளை வேண்டினாய் என்பதை அன்றுதான் சொன்னாய்.

அதற்கான வேண்டுதலை நிறைவேற்றவே நீ வல்லிபுரக்கோலிலுக்கும் சேர்ச்சுக்கும் போனாய். அந்த தலைவனிடம் எத்தனை பரிவு பாசம் அவரின் தலைமைமீது எவ்வளவு பற்று உனக்கு.
இந்த அமைப்பை ஒரு மக்கள் அமைப்பாக மாற்ற நீ எத்தனை செயலூக்கத்துடன் அலைந்தாய் நண்பனே
தமிழீழவிடுதலை வரலாற்றில் பொதுமக்களின் ஒன்று திரள்வுடன் நீ முன்னின்று நடாத்திய 10.04.1984 பருத்துறை காவல்நிலையம் மீதான தாக்கதலும் அதற்கான உன் பிரயத்தனங்களும் எத்தனை உயரியது ராலா
இறுதியாக நீ மிகவும் நேசித்த தோழன் சீலனின் முதலாவது நினைவுஎழுச்சி நாளுக்கான சுவரொட்டிகளை உரிய இடத்துக்கு கொண்டு செல்லும் வாகன த்துக்கு காவலாக நீ சென்ற போது வல்லை வெளி பகுதியில் நீ வீரச்சாவை அடைகிறாய். அன்றுகூட நீ அந்த சிங்களபடை வாகனத்தை உன்னை கலைக்கும்படி செய்ததன்மூலம் என் தோழர்களை காத்தாய்.அப்போதும் ஒரு விடுதலைப்புலி தளபதி எப்படி நடப்பான் என்பதை காட்டினாய்.
உன்னுடைய வீரச்சாவுக்காக அமைப்பு அடித்த சுவரொட்டியில் எழுதி இருந்த அதே வாசகம்தான் இப்போதும் மனமெங்கும் என் தோழனே
” சிறகொடிந்த உன் விடுதலைப் பறவையை
நான் வளர்க்கிறேன்.-”
ஆம் நாம் வளர்ப்போம் தோழனே
ச.ச.முத்து

athuraiyapa  இராணுவத்தினரின்  பிடியிலிருந்து  தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37 athuraiyapa

Allgemein தாயகச்செய்திகள்