இலங்கை அகதிகள் மீது குண்டுத்தாக்குதல்; அதிரடிப்படையினர் குவிப்பு!

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் முகாமைச் சுற்றி ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

தமிழகத்தின் கோவை மாவட்டம் பூளுவப்பட்டியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை இந்து முன்னணியினரே நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தொண்டாமுத்தூரை அடுத்துள்ள பூளுவப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று முந்தினம் மாலை கரப்பந்தாட்டம் விளையாடிய போது அவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது அந்த வழியாகச் சென்ற சிவா என்பவர் தகராறினை விலக்கி அவர்களைக் கண்டிக்க முற்பட்டவேளை சிவாவுக்கும் அவர்களுக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் இந்து முன்னணியைச்சேர்ந்தவரும் சிவாவின் மகனுமான சுரேந்திரராஜா என்பவர் தனது கட்சியினரோடு நேற்று இரவு அகதிகள் முகாமிற்கு சென்று தகப்பனைத் தாக்கிய சம்பவம் குறித்து விசாரித்துள்ளார். இதன்போது அவர்களுக்கிடையில் பாரிய மோதல் இடம்பெற்றதாகவும் அரிவாள் பொல்லு போன்றவற்றை வைத்துத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் அகதிகள் முகாம் மீது பெட்ரோல் குண்டையும் வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு சம்மந்தப்பட்ட நபர்களை பொலிஸார் தேடிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Allgemein உலகச்செய்திகள்