கிளிநொச்சியில் மிகவும் உணர்வெழுச்சியாக கரும்புலிகள் நினைவு நாள்

தமிழர்களின் விடுதலைக்காக, நேரம் குறித்துத் தம்மையே தற்கொடையாக்கிய கரும்புலிகள் நினைவு நிகழ்வுகள் கிளிநொச்சியில் மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்கமைப்பில் கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வுகளில் ஆனையிறவு வெற்றிச் சமரின் போது தமிழ் மக்களின் விடுதலைக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த கரும்புலி மாவீரன் மேஜர் நந்தன் அவர்களது சகோதரன் மகேஸ்வரன் கலந்து கொண்டு ஈகச்சுடரினை ஏற்றி மலர் மாலையை அணிவித்து வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாவீரர்களின் தந்தையர்கள், சகோதரர்கள், ஏனைய உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் கரும்புலி மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை உவந்தளித்த வரலாறுகள் உள்ளடங்கிய நினைவுப் பகிர்வுகளும் மிகவும் உணர்வெழுச்சியாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Merken

Allgemein தாயகச்செய்திகள்