அவசியம் ஏற்பட்டால் வட கொரியா மீது ராணுவ படைகள் பயன்படுத்தப்படும் : அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட தூரம் செல்லும் ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததை அடுத்து, அவசியம் இருக்கும் பட்சத்தில் தேவையான அளவு ராணுவ படைகள் வட கொரியா மீது பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே, ஐ.நா. மன்றத்தில் வட கொரியாவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனையை அந்நாட்டின் கூடுதல் ராணுவ பலத்தை குறிக்கிறது என்று வர்ணித்த நிக்கி ஹாலே, வட கொரியா மீது வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

நிக்கி ஹாலேவின் கருத்துக்கள் வெளியாகி சிலமணி நேரங்களில், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாக ஜப்பானிய கடலில் பல ஏவுகணைகளை வீசினர்.

அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionஅமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே

அதே நேரத்தில், வட கொரியாவுக்கு எதிரான விரோத கொள்கை போக்கை அமெரிக்கா கைவிடும்வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என வட கொரியா தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை, தொடர் சோதனைகளில் சமீபத்தியதாகும். ஐ.நா பாதுகாப்பு சபையின் தடை உத்தரவை மீறி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மேட்டிஸ் மற்றும் ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டோமோமி இனாடா ஆகியோர், இந்த ஏவுகணை சோதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஆத்திரமூட்டும் செயல் என்று கண்டித்துள்ளனர்.

ஜப்பானிற்கு பாதுகாப்பு வழங்குவதிலும், போர் சூழல் ஏற்படும் அபாயத்திலிருந்து தடுப்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்பதை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.