ஒரு கரும்புலி வீரனின் உண்மைக் கதை !

அடுத்த நேரச் சாப்பாட்டுக்கே வழியற்ற ஒரு ஒலைக் குடிசையில் இருந்து தாய் நாட்டின் விடுதலைக்காக இயக்கத்திற்கு வந்தவன் அந்தப் புலிமகன்.

இப்போது ஒரு கரும்புலி நடவடிக்கைக்காகப் போயிருந்தான்.

எதிரியின் ” இதயத்தில் ” தான் அவனுடைய இலக்கு.

எனவே அந்தச் சூழலோடு ஒன்றிப் போய் அதற்கே உரியவனாகத் தன்னை அவன் இனங்காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.

அத்தகைய தோற்றப்பாட்டைக் கொடுத்தாலேயே தனது நோக்கத்தை அவன் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.

அந்தத் தள நிலமையோடு அவன் சந்தேகமறச் சங்கமிக்க , பணத்தைப் புரளவிட வேண்டியிருந்தது.

அந்த ஏழை வீரனது கையினால் செலவு செய்யப்பட்ட பணத்தின் தொகை பெரியது. அதன் நோக்கத்தைப் போலவே.

ஒவ்வொரு சதத்திற்கும் கணக்கு காட்ட வேண்டிய இயக்கத்தில், இலட்சக் கணக்கான ரூபாய்களுக்கு கணக்கற்ற செலவு அது.

அந்தப் பணி அப்படியானது.

 

அதனால் காட்டப்படாத கணக்குகள் பற்றிக் கேட்கப்படாமலேயே , கேட்கப்படுகின்ற பணம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

வந்துபோகும் நேரங்களில் , ‘ அங்க கொடுத்தன் இங்க கொடுத்தன் ‘ என்று வாயால் சொல்வது மட்டுமே – அந்த இலட்சக்கணக்கான ரூபாய்களுக்குக் கணக்கு.

‘ நம்பிக்கை ‘ மட்டுமே நம்பிக்கையாயிருந்தது.

எல்லா ஏற்பாடுகளும் நிறைவாகிய பின் , தாயகத்திலிருந்து அவன் இறுதிப் பயணம் புறப்படத் தயாராகிவிட்ட ஒரு அதிகாலையில் ….

அம்மாவிடம் போயினான்.

 

‘ சொரிந்து ‘ கொண்டிருக்கும் திண்ணையில் ஓரமாக உட்காந்திருந்தாள் அம்மா.

சோர்ந்து போயிருந்தாள். காலை தேனிருக்கு என்ன செய்யலாம் என்று தான் யோசித்துக் கொண்டு இருந்திருப்பாளாக்கும்.

பிள்ளையைக் கண்டதும் பூரித்துப் போனாள். துடித்துப் பதைத்து எழுந்தோடி வந்து , இரு கைகளாலும் கன்ங்களைத் தடவி அழைத்துப் போனாள்.

எல்லாப் பக்கத்தாலும் பிய்ந்து போயிருந்த ஒரு பனையோலைப்பாயில், நித்திரை கலையாமல் சுருண்டு கிடந்தாள். ஆசைத் தங்கச்சி. பார்க்கவே தெரிந்தது – நிச்சயமாக இரவு அவள் சாப்பிடவில்லை.

அருகில் போயிருந்து தலையை வருடிவிட்டபோது நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

‘ எப்போதாவது வருகிற பிள்ளை எவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்போதுதான் வந்திருக்கிறான் …. ஏதாவது செய்து குடுப்பமென்றால் கூட …… ‘ அம்மா உள்ளுக்குள்ள குமுறியிருப்பாள்.

 

கடைசியாக அம்மாவின் கையால் ஒரு சாப்பாடு. அதற்காகத்தானே…. பிள்ளையும் பாசத்தோடு ஓடிவந்தான். ஆனால் , விட்டிலே எதுவும் இருக்காது என்பதும் அவனுக்குத் தெரியாததா என்ன ?

என்றுமில்லாதவாறு – சட்டைப்பைக்குள் இருந்து கொஞ்சம் காசு எடுத்துக் கொடுத்தான். நல்ல சாப்பாடாகச் செய்யணை …… சாப்பிடுவம் ……

 

அம்மாவுக்கு விசித்திரமாக இருந்தது. ஏனென்றால் – அதற்கு முன் ஒருபோதும் மகன் அப்படித் தந்ததில்லை.

சமைத்து முடித்து , அம்மா ஊட்டிவிடச் சாப்பிட்டு, அவன் விடைபெறத் தயாரானான்.

கடைசி விடைபெறல் , அம்மாவுக்கு அவன் தந்த முத்தமும் அப்படித்தான்.

 

வறுமை உந்தித் தள்ளிய போதும் – கேட்கக்கூடாது என்பதை உள்ளுணர்வு சொல்லியது ….. என்றாலும் …. தயங்கித் தயங்கி வந்து அந்த ஏழை அம்மா கேட்டாள்.

இன்னுமொரு ஐந்நூறு ரூபா தந்திட்டுப் போமோனை…..

 

அம்மாவை நினைத்தபோது விழியோரம் கசிந்த நீரை அவன் மறைத்திருக்கக்கூடும்.

பரிவோடு கேட்ட அம்மாவுக்கு அவன் சொன்னான்.

” இது நாட்டின்ரா காசம்மா…. தரமாட்டன்…. கேளாதையணை. ”

சொல்லி விட்டு அவன் போனான்….. போய்விட்டான்.

அம்மாவுக்கு எதுவுமே தெரியாது ….. பாவம் !

 

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

(உயிராயுதத்திலிருந்து)

Allgemein