யாழ். அரச அதிபரின் வேண்டுகோளை நிராகரித்த வேலையற்ற பட்டதாரிகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அரச வேலைவாய்ப்புக் கோரி ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 116 ஆவது நாளாகவும் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை மாவட்டச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஜனாதிபதி அண்மையில் யாழில் வைத்து உங்களுக்கு வாக்குறுதியளித்தது போன்று வடக்கில் ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வர்த்தகமானி அறிவித்தலை அரசாங்கம் அடுத்த மாத முதல் வாரத்தில் வெளியிடத் தீர்மானித்துள்ளது.

ஆகவே, நீங்கள் உங்கள் போராட்டத்தைக் கைவிட்டு வீடு செல்லுமாறு பட்டதாரிகளின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

எனினும், பட்டதாரிகளின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளை நிராகரித்து விட்டனர். இது தொடர்பில் இன்று கருத்துத் தெரிவித்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள்,

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி முதற்கட்டமாக ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால் நாம் எமது போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பில் ஒன்று கூடி முடிவெடுப்போம் எனவும், அதுவரை எமது போராட்டம் தொடரும் எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

Allgemein தாயகச்செய்திகள்