தென்னிலங்கை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் ஈழம் அழிக்கப்பட்டது

தென்னிலங்கை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் ஈழம் அழிக்கப்பட்டது
கிளிநொச்சியில் அண்மையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையில் எழுதப்பட்டிருந்த ஈழம் என்ற சொல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் கட்டாயத்தின் பேரில் அழிக்கப்பட்டுள்ளமை, மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈழம் எனும் சொல் இன முரண்பாட்டையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதுடன், அது தனிநாட்டை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்து அதனை அழிக்குமாறு தென்னிலங்கை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கமைய அச்சொல் இன்று அழிக்கப்பட்டுள்ளது.

உலக தமிழ்ச்சங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் கடந்த சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

உலகத்தின் மீது திருவள்ளுவர் இருப்பது போன்று குறித்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் உலகத்தில் ஈழம் என்ற சொல் குறிக்கப்பட்டுள்ளது.

அது சர்ச்சைக்குரிய விடயம் எனத் தெரிவித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், நேற்றையதினம் கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, சிலையை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய கரைச்சி பிரதேச சபையின் செயலாளரிடம் விசாரணை மேற்கொண்டதுடன், ஈழம் என்ற சொல்லை அழிக்குமாறும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Allgemein தாயகச்செய்திகள்