விக்னேஸ்வரனை கைது செய் என்கிறார் கோட்டாபய ..அப்படியானால் கோதாவை என்னசெய்யவேண்டும்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தலைவர்களை மோசமான இனவாதிகளாக மீண்டும் அடையாளப் படுத்தியுள்ள ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்களைக் கைது செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவரும் குற்றச்சாட்டுக்காக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்படும் தகவல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கோட்டாபய, இனவாதத்தை பரப்புகின்ற யாராக இருந்தாலும் கைது செய்தால் உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவின் தென் பகுதிகளில் ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நலன்வேண்டி அன்னதான நிகழ்வொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நுகேகொடையில் உள்ள இல்லத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் அவரின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரரை இனவாதத்தை தூண்டிவரும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப் போவதாக பொலிசார் அறிவித்துள்ளது குறித்து ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், “யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் இனவாதக் குழுவினரை பிடித்துக்கொள்ள முடியும். அங்குதானே அனைவரும் உள்ளனர். இனவாதப் பிரிவினர் தெற்கில் இருக்கின்றனர் என யார் கூறியிருக்கின்றனர்? மிகப்பெரிய இனவாதியான விக்னேஸ்வரன் அங்கு இருக்கின்றார். அவரே இனவாதப் பேச்சுக்களைப் பேசுகிறார். அவரைப் பிடிப்பதாக யாராவது கூறியிருக்கிறார்களா? என்றார்.

இதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான தூண்டிவரும் வரும் பொதுபல சேனா அமைப்புடன் கோட்டாபய ராஜபக்சவிற்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிட்டார்.

“பொதுபல சேனாவா அல்லது வேறு யாரும் செய்தார்களா என்பதை கைது செய்துதான் பார்க்க வேண்டும். சட்டத்தை அமுல்படுத்துவது நாங்கள் அல்ல” – என்று குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திலுள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களும், பொலிஸாருமே சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டிவருவதாக குற்றச்சாட்டினார்.

“சிலர் இனவாதத்தை பரப்புகின்றனர். சிலரால் கூறுகின்ற சில விடயங்களை ஆராய்ந்து பார்க்காமல் பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். வர்த்தக நிலையம் மின் ஒழுக்கு காரணமாகவே தீ ஏற்பட்டதாக உரிமையாளர்களும், பொது மக்களும் கூறுகின்றனர். ஆனால் இது சிங்கள இனவாதிகளால் நடத்தப்பட்டதாக பொலிஸாரும், சில அமைச்சர்களும் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மோதல்களும், இனவாதமுமே தலைதூக்கும். மோதல்கள் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வது அமைச்சர்களதும், பொலிஸாரதும் கடமை. எந்த இனங்களுக்கு எதிராகவும் குரோதத்தை ஏற்படுத்தக்கூடாது. இதனை கட்டுப்படுத்ததே அரசாங்கம் உள்ளது. பொறுப்பு வாய்ந்த அமைச்சரவை அமைச்சர்களே இவ்வாறு கூறினால் பிழையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் அது பயங்கரமாகும். இது குறித்து அமைச்சர்களும் பொலிஸாரும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்” – என்றார்.

Merken

Merken