இனப்படுகொலையை மூடிமறைக்கவே மங்கள-சுமந்திரன்-சுரேந்திரன் கூட்டணி!

ஈழவிடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளைச் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அமெரிக்காவின் எதிர்நிலைப்பாடு வலுவான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுத்துவிட முடியாது.

சிறிலங்காவின் இன்றைய அரசின் பங்காளியாகவும் தமிழர்களின் இனப்பிரச்சினை விடையத்திற்கு தீர்வுகாணும் குழுவின் தலைவியாகவும் விளங்கும் சந்திசிக்கா பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்துலக அளவில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா தடைசெய்வதற்கு சந்திரிக்கா அரசின் வெளிவிவகார அமைச்சராக இருந்த இலக்சுமன் கதிர்காமரின் அதிதீவிர செயற்பாடே காரணமாக அமைந்திருந்தது.

சிங்களத்தின் தமிழர் விரோத செயற்பாட்டிற்கு துணைபோகும் தமிழர்களைப் பயன்படுத்தி தமிழர்களையே அழித்தொழிக்கும் சதித்திட்டத்தில் சிங்கள தேசத்தின் ஆட்சிபீடமேறிய தலைவர்கள் அனைவரும் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் கதிர்காமர் ஏற்படுத்திக் கொடுத்த பாதையில் மங்கள சமரவீர பயணப்பட்டு மகிந்தவுடன் இணைந்து தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருந்ததுடன் இன்றும் மைத்திரியுடன் இணைந்து அதனை செயலாக்கம் கொடுத்துவருகின்றார்.

மகிந்த இராசபக்சே ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீர அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முடக்கும் விதமாக ஒரு செயலணிக்குழுவினை ஏற்படுத்தியிருந்தார்.dcp5467464646464

இந்த செயலணியின் உருவாக்கத்தின் பின்னரே புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. கனடா எல்லைவழியாக அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்த விடுதலைப்புலிகள் கைதுசெய்யப்பட்டிருந்ததன் பின்னணியிலும் இந்த சிங்கள-அமெரிக்க செயலணிக் குழுவே இருந்துள்ளது.

ஹாவாய்த் தீவில் உள்ள பசுபிக் கட்டளைப் பீடத்தின் கீழ் உள்ள 7வது கடற்படை அணியின் போர்க் கப்கலான ‘யு.எஸ்.எஸ். புளு றிட்ஜ்’ இல் இருந்து விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டம் பற்றிய செய்மதிப்படங்கள் சிறிலங்கா அரசிற்கு வழங்கப்பட்டன. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஊடாகவே இந்த செய்மதிப்படங்கள் சிறிலங்கா இராணுவத்திற்கு கொண்டு சேர்க்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பெறப்பட்ட செய்மதிப்படங்களை ஆய்வுசெய்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் சிறிலங்கா இராணுவத்தில் அப்போது யாரும் இருந்திருக்கவில்லை. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மூலம் மேஜர் கெலும் மத்துமகே என்ற சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டு கொலராடோவில் உள்ள இராணுவ அக்கடமியில் இதுகுறித்த பயிற்சிநெறி வழங்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட பேர்ள் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுதலைப் புலிகளின் கடற் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. கரையில் இருந்து 900 கடல் மைல் தொலைவில் வைத்து இப்பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான சிறப்புப் பயிற்சிகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்களை மேற்பார்வை செய்து வழிநடத்தியிருந்தது அமெரிக்க கடற்படை.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பெரும் அழிவுகளுடனும் இழப்புக்களுடனும் முள்ளிவாய்க்காலில் முகம்புதைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் முடக்கப்பட்டதே காரணமாக அமைந்திருந்தது. சர்வதேச ஆயுத விநியோக வழிகள் தடுக்கப்பட்டமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

இவையாவற்றிற்கும் அடித்தளமாக அமைந்தது தற்போது புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் நல்லுறவை ஏற்படுத்தத் துடிக்கும் மங்கள சமரவீரவின் சதிச்செயலே காரணமாகும். அன்று மட்டுமல்ல இன்றும் மங்களவின் அமெரிக்காவுடனான உறவு ஆழமானதாகவே இருந்து வருகின்றது. அதுவே இந்த ஆட்சிமாற்றத்திற்கான அடிப்படையாகவும் அமைந்திருந்தது.

புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை முடக்குவதற்காக அன்று அமெரிக்க கடற்படை சிங்களத்திற்கு உதவியது. அதே போன்று கடந்த ஏப்ரல் 19ம் திகதி அன்றும் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா உள்பட மேலும் நான்கு கடற்படை அதிகாரிகள் கொண்ட குழுவினர் அமெரிக்க கடற்படையின் பிரத்தியேக பயன்பாட்டில் இருக்கும் விமானம் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள்.

சிறிலங்கா கடற்கரையில் இருந்து 225 கடல் மைல் தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மிதக்கும் தீவு போன்று கடலில் நகர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம்தாங்கிக் கப்பலிற்கு மங்கள தலையிலான குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

அதியுயர் இராணுவ இரகசியங்கள் பேணப்படும் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சனுக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டமை சாதாரனவிடையமாக கருதிவிட முடியாது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டிருந்த தேக்கநிலையே ஆட்சிமாற்றத்திற்கான அடிப்படையாக அமைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புதிய அரசுடன் அமெரிக்காவின் உறவானது சுமூகமாக இருந்துவரும் நிலையில் பாதுகாப்பு விடையங்களில் ஏற்படப்போகும் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவே இச்சந்திப்பு உணரப்படுகின்றது.

அமெரிக்க சிறிலங்கா இருதரப்பு உறவானது முன்னரைக்காட்டிலும் வேகமாக பலம்பெற்று வருவதானது தமிழர்களது நீதிக்கான குரலை வலுவிழக்கச்செய்துவிடும். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டிருந்த இடைவெளியை நிரப்புவதுடன் இந்துமாகா சமுத்திரப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தினை நிலைநிறுத்துவதற்காக சிங்களத்துடனான உறவை முக்கியமானதாக அமெரிக்கா கருதுகின்றது.

அமெரிக்கா தலைமையில் உலகநாடுகளை அணிதிரட்டி பயங்கரவாதம் என்ற போர்வையில் திட்டமிட்டு தமிழினப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசு அதுகுறித்த சர்வதேச விசாரணைக்காக எழுப்பப்படும் குரல்களையும் பலவீனப்படுத்த தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. ஆட்சிகள் மாறினாலும் இவ்விடையத்தில் யாரும் புதியவர்கள் கிடையாது என்பதால் அம்முயற்சி தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலகத்தை கைக்குள் போட்டுக்கொண்ட சிங்களத்திற்கு என்றும் பெரும் சவாலாக விளங்குவது புலம்பெயர் தமிழர்கள்தான். பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்துநிற்கின்ற போதிலும் விடுதலைப் போராட்டத்தை உயிர்ப்புடன் முன்னகர்த்திச் செல்வதோடு நீதிக்கான குரலை வலிமையாக எழுப்பியும் வருகின்றனர் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள். அவர்களை தலைமைதாங்கும் அமைப்புகளுக்கிடையே இருக்கும் பிளவு நிலையை சாதகமாக்கி எம்மை பலவீனப்படுத்தும் முயற்சிகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருகின்றது.

தாயகத்தில் சுமந்திரனை வைத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சி பெருமதிப்பிற்குரிய நீதியரசர் விக்னேசுவரன் அய்யாவின் உறுதியான தெளிவான நிலைப்பாடுகாரணமாக தேக்கநிலையை அடைந்தபோதிலும் மனம்தளராது சுமந்திரன் மூலமாக புலம்பெயர் தளத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது சிங்களம்.

அதன் வெளிப்பாடுதான் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்களின் பங்கேற்புடன் மேலும் சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் எரிக்சொல்கேய்ம் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களையும் ஒன்றுகூட்டி லண்டனில் மேற்கொள்ளப்படும் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்வாழ் இலங்கை மக்களுடன் நல்லிணகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இச்சந்திப்பானது சுமந்திரன்களைப்போன்று சிங்களத்திற்கு முறைவாசல் செய்யும் இழிபிறவிகளுக்கு மகுடம்கூசூட்டும் விதமாகவே திட்டமிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலமாக இனப்படுகொலைக்கு நீதி கேட்டு சர்வதேச விசாரனையை வலியுறுத்தி உரிமைக்குரலெழுப்பும் அமைப்புகளை புறக்கணித்து பலவீனப்படுத்திவிடலாம் என்பதே இதன் நோக்கமாகும். அதற்காகவே தாயகம் மற்றும் புலத்தில் உண்மையாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளை தவிர்த்து சுமந்திரன், சுரேந்திரன் போன்றவர்களை முன்னிலைப்படுத்துகின்றது சிங்களம்.

ஒட்டுமொத்த சிங்களத்தின் பிரதிநிதியாக மங்கள சமரவீரவே இன்று செயற்பாட்டாளராக உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டுவருகின்றார். சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலையை மூடிமறைப்பதே மங்களவின் பிரதான வேலையாகும்.

தாயகத்தில் சுமந்திரனை வைத்து காரியம் சாதித்துவிடலாம் என நினைத்த சிங்களத்திற்கு எதிர்பாராத நெருக்கடியாக நீதியரசர் விக்னேசுவரன் அய்யா அவர்கள் உருவெடுத்துள்ளார். வழக்கம்போல் புலி முத்திரை குத்தி ஒதுக்கித்தள்ளிவிட முடியாதவாறு நீதியரசர் விக்னேசுவரன் திகழ்கின்றார்.

நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர்களுக்கான நீதியை தாமதப்படுத்தி தடுத்துவிட நினைத்த சிங்களத்திற்கு நீதியரசர் விக்னேசுவரன் அய்யா பெரும் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளதால் தனது பார்வையை புலம்பெயர் தளத்திற்கு திருப்பியுள்ளது. இவை அனைத்தும் நன்கு திட்டமிட்டு வல்லாதிக்க நாடுகளின் ஆலோசனையுடன் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளாகும்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் சிங்களத்துடன் சேர்த்து இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட இந்த சர்வதேச சமூகத்திற்கும் பெரும்பங்குண்டு. அதனால் தமக்குத்தானே தண்டனை வழங்கும் நிலையில் இருப்பவர்கள் அதனை தவிர்க்கவே சிங்களத்துடன் இணைந்து திட்டமிடுகின்றார்கள்.

சுமந்திரன், சுரேந்திரன் போன்றவர்களை அரவணைத்து தமிழர்களது தலையில் அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை ஒப்பிற்கு வழங்கி சர்வதேச விசாரனை குறித்த கோரிக்கையை மழுங்கடிக்கப்பார்க்கிறார்கள்.

இந்த நோக்கத்துடன் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலாவது இரகசிய சந்திப்பினைத் தொடச்சியே தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் சந்திப்பாகும். இச்செயற்பாட்டை வன்மையாக கண்டித்திருக்கும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை உறுப்பினருமான சிவாசிலிங்கம் அண்ணா குறிப்பிடுகையில், இந்த சந்திப்பு ஒரு ஏமாற்று வேலை என்றும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கும் இனப்படுகொலையாளிகளைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாக குறிப்பிட்டுள்ளார். அதுதான் உண்மை.

தமிழர்களின் விடுதலைக்கு வேட்டுவைக்கும் விதமாகவும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றவும் முயற்சிக்கும் மங்கள சமரவீர-சுமந்திரன்-சுரேந்திரன் ஆகியோரின் முயற்சியை தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்போம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”

ஈழதேசம் இணையத்தள அரசியல் ஆய்வாளர் :- ம.செந்தமிழ்.(08-06-2015)

Allgemein