ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சமுத்திரம் மற்றும் சமுத்திரவளங்களை அர்த்தமுள்ள வகையில் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான மாநாட்டில் பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் மனித நல்வாழ்விற்காக சொல்லப்படும் விடயங்கள் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சுற்றாடல் குறித்து பொது மக்களுக்கான அறிவு மற்றும் புரிந்துணர்வு வரலாற்றில் முன்னர் இல்லாத அளவுக்கு இன்று விரிவுபட்டுள்ளது.

இருப்பினும், சுற்றாடல் பேண்தகு விடயமாக முன்னெடுப்பதற்கு எம்மால் முடியாதுள்ளது. இதனாலேயே இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதேபோன்று தெற்காசியாவில் தென்கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு பசுபிக் சமுத்திர வலயத்திலும் பொருளாதார அபிவிருத்தி சமாதானத்தை முன்னெடுப்பதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற நோக்கம் மூன்றையும் நாம் வெற்றிகொள்ள வேண்டும் .

விசேடமாக இலங்கை போன்ற தீவு, நாட்டுக்கு உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர சுற்றாடல் உட்கட்டமைப்பு மாற்றங்களுக்கு நாம் நேரடியாக முகங்கொடுக்கின்றோம்.

உலகக் கடலில் மிதக்கும் பாரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பெருமளவில் இந்துமா சமுத்திரத்திலேயே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சமுத்திரம் மாசடைதலை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் பேண்தகு சமுத்திரவள பயன்பாட்டில் எமக்கு பெரும் சவால்கள் உண்டு.

இதேபோன்று சட்டவிரோதம் மற்றும் விதிகளை மீறும் கடற்றொழில் நடவடிக்கையை வரையறுத்தலுக்காக ஐக்கிநாடுகள் சபையின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.

இதேபோன்றே நிலைபேறான அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதற்காக மேம்படுத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் ஒத்துழைப்பு உண்டு.

சுற்றாடல் பாதுகாப்பு குறித்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இன்றைய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் இதனூடாக நாம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் சமுத்திரவியல் மாநாடு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 28ஆம் திகதி தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று அரசதரப்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது