தமிழ் சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலம்! குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் : மனோ கணேசன்

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மூதூர் சம்பவம் தொடர்பில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள், சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களின் உணர்வுகள் புரிகின்றன.

எனினும் விசாரணைகள் தொடர்பில் எவரும் சஞ்சலம் அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது, விசாரணை மற்றும் வழக்கு தொடரப்பட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

எந்த ஒரு காரணம் கொண்டும் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிட முடியாது. அதேபோல் இனங்களுக்கு இடையே பதற்றத்துடன் இதை பார்க்கவும் அனுமதிக்க முடியாது.

இவை தொடர்பில், உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துர்பாக்கிய சம்பவம் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை முதல்நாளில் இருந்து கண்காணித்து வருகிறேன்.

பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் பெரெரா, பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் சந்திரகுமார மற்றும் மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடைபெற இருந்த அடையாள அணிவகுப்பு, பாதிக்கப்பட்டோரின் மருத்துவ தேவைகள் காரணமாக எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அணிவகுப்பு இடம்பெற்றதாகவும், எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சில ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என்றும் கூறிள்ளார்.

திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பை அடுத்து, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.